பொதட்டூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
பொதட்டூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி சைக்கிளில் சென்ற தொழிலாளி பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, பொதட்டூர்பேட்டை அருகே நெடுங்கல் இருளர் காலனியை சேர்ந்தவர் நாகபூஷணம் (வயது 55). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு கூலி வேலை செய்து விட்டு தனது சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது திருத்தணியில் இருந்து பொதட்டூர்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற சண்முகம் (51) என்பவரது மோட்டார் சைக்கிள் நாகபூஷணம் ஒட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகபூஷணம் படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் உடனடியாக சிகிச்சைக்காக பொதட்டூர்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த நாகபூஷணம் திடீரென இறந்தார்.
இது குறித்து நாகபூஷனத்தின் மகள் பாக்கியலட்சுமி பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள சண்முகம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்தணி நகராட்சி மேட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா (வயது 83). இவர் மகன் மோகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்கும் போது எதிர்பாராதவிதமாக புடவையில் தீப்பிடித்து உடலில் தீ பரவியது.
வலியால் கதறிய வசந்தாவின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதில் படுகாயமடைந்த வசந்தாவை திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி வசந்தா உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.