லாரி மோதி தொழிலாளி பலி
கடையநல்லூரில் லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
புளியங்குடி சிந்தாமணி சான்றோர் மேல தெரு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் குருசாமி மகன் சக்திவேல் (வயது 32). கூலி தொழிலாளியான இவர் கடந்த ஒரு வார காலமாக குற்றாலத்தில் உள்ள சிப்ஸ் கடையில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை குற்றாலத்தில் இருந்து புளியங்குடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கடையநல்லூர் அட்டைக்குளம் அருகில் சென்றபோது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
லாரி டிரைவரிடம் விசாரணை
இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான மேலகரத்தை சேர்ந்த லட்சுமி நாராயணன் (45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த சக்திவேலுக்கு கிருஷ்ணசெல்வி என்ற மனைவியும், இசக்கிராஜ் (6), குரு மாதவன் (4) ஆகிய 2 மகன்களும், அகல்யா (4) என்ற மகளும் உள்ளனர்.