நகைக்காக பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனைவிழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியமாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி லதா (வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 3.9.2018 அன்று மாலை பெரியமாம்பட்டு ஏரிக்கரை அருகில் உள்ள தனது கரும்பு வயலில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் ஆடுகளை மேய்த்துவிட்டு, அந்த வயலுக்கு அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் கூலித்தொழிலாளியான ராமச்சந்திரன் என்கிற சிறுவங்கூரான் (27) என்பவர் வந்தார்.
அவரை பார்த்த லதா, எதற்காக இங்கு வந்தாய் எனக்கேட்டுள்ளார். அதற்கு ராமச்சந்திரன், தண்ணீர் குடிப்பதற்காக வந்துள்ளதாக கூறவே தண்ணீர் குடித்துவிட்டு செல்லுமாறு லதா கூறிவிட்டு துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது லதாவின் பின்புறமாக நைசாக சென்ற ராமச்சந்திரன் திடீரென, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து லதாவின் கழுத்தை அறுத்துவிட்டு அவர் அணிந்திருந்த 5½ பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த லதாவை அவரது பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட ராமச்சந்திரனுக்கு லதாவை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், நகையை கொள்ளையடித்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராமச்சந்திரன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.