வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை
வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை
வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
வளர்ப்பு மகள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதுடைய கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லாமல் இருந்தது.
இதனால் இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியின் தங்கைக்கு பிறந்த பெண் குழந்தையை எடுத்து வளர்க்க முடிவு செய்தார். 8 நாட்களாக இருக்கும்போதே அந்த பெண் குழந்தையை வாங்கி தனது குழந்தையை போல் கணவன், மனைவியும் வளர்த்து வந்தனர்.
பாலியல் தொல்லை
ஆனால் அந்த பெண் குழந்தை வளர, வளர கூலித்தொழிலாளியின் பார்வையும் மாற தொடங்கியது. தனது வளர்ப்பு குழந்தை என்பதையும் மறந்து அந்த 13 வயதில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க தொடங்கினார்.
பல முறை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். ஆனால் இது யாருக்கும் தெரியவில்லை. அடிக்கடி அந்த சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது.
சிறுமி கர்ப்பம்
திடீரென ஒரு நாள் வயிற்றுவலி அதிகமானதுடன் ரத்தப்போக்கும் அதிகரித்ததால் உடனே அந்த சிறுமியை அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.
அப்போது தான் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்திருந்ததும், வயிற்று வலியால் கர்ப்பம் கலைந்து போனதும் தெரியவந்தது.
தந்தையே காரணம்
இதைத்தொடர்ந்து அந்த சிறுமியிடம் அதற்கு யார் காரணம்? என விசாரித்தனர். அப்போது தனது தந்தையான கூலித்தொழிலாளி தான் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும், இதை வெளியே சொன்னால் கொலை செய்வதாக மிரட்டினார் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளியை கைது செய்தார்.
வாழ்நாள் சிறை
பின்னர் அவரை தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை செய்து கூலித்தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.