சாராயம் குடித்த கூலி தொழிலாளி சாவு


சாராயம் குடித்த கூலி தொழிலாளி சாவு
x

தானிப்பாடி அருகே சாராயம் குடித்த கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

தானிப்பாடி அருகே சாராயம் குடித்த கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூலி தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே இளையாங்கன்னி கிராமத்தில் உள்ள குழந்தை ஏசு நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 55), கூலி தொழிலாளி.

இவர் தானிப்பாடி அருகில் உள்ள மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சும் கும்பலுடன் சேர்ந்து சாராயம் காய்ச்சும் கூலி வேலை செய்து வந்தார்.

இன்று காலை வழக்கம் போல சாராயம் காய்ச்சும் வேலைக்கு சென்றவர் மாலை வீடு திரும்பும்போது சாராயம் குடித்துவிட்டு வந்துள்ளார். வரும் வழியிலேயே தட்டரனை என்ற இடத்தில் சுருண்டு விழுந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

சாலை மறியல்

இதையறிந்த அந்தோணிசாமியின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் ஆத்திரம் அடைந்த அவர்கள் பிணத்தை எடுக்காமல் அதே இடத்தில் வைத்து போலீசாரை கண்டித்து இளையாங்கன்னி மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பலமுறை தட்டரணை பகுதியில் நடைபெறும் சாராய விற்பனை மற்றும் சாராயம் காய்ச்சும் தொழிலை கட்டுப்படுத்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்த சோக சம்பவம் நடைபெற்றதாகவும் எனவே அந்தோணிசாமியின் குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் தானிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்தோணிசாமி இறந்ததற்கான உண்மை நிலை கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

ஆனால் பொதுமக்கள் ஏற்க மறுத்து தொடர்ந்து இரவு 8 மணி வரை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story