புதுக்கடை அருகே வேலை செய்த வீட்டில் 6¾ பவுன் நகையை திருடிய தொழிலாளி கைது
புதுக்கடை அருகே வேலை செய்த வீட்டில் 6¾ பவுன் நகையை திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
புதுக்கடை, :
புதுக்கடை அருகே வேலை செய்த வீட்டில் 6¾ பவுன் நகையை திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கள்ளச்சாவி தயார் செய்தார்
புதுக்கடை அருகே உள்ள மூன்று முக்கு பனவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெபநிசாந்த் (வயது 35). இவர் தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் உள்ள ஒரு ஏற்றுமதி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் புதிதாக வீடு கட்டி கிரகபிரவேஷம் நடத்தி குடியேறினார். அந்த வீட்டில் மார்த்தாண்டம் அருகே உள்ள சிராயன்குழி பகுதியை சேர்ந்த ஏசாயா (54) என்பவர் மார்பிள் பாலீஷ் போடும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஜெபநிசாந்த் மகன் வீட்டு சாவி கொத்தை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தான். அதில் ஒரு சாவியை ஏசாயா அபேஸ் செய்தார். அந்த சாவியை போல் கள்ளச்சாவி தயார் செய்துவிட்டு, அபேஸ் செய்த சாவியை மீண்டும் வேலை செய்த வீட்டில் கொண்டு வந்து வைத்து விட்டார். இந்தநிலையில் ஜெபநிசாந்த் வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டில் வைத்து இருந்த நகைளை சரி பார்த்த போது, நகைகள் திருட்டு போனது ெதரிய வந்தது. 2 முறை நகை திருட்டு போனதை தொடர்ந்து ஜெபநிசாந்த் வீட்டில் கண்காணிப்பு கேமராவை பொருத்தினார். அந்த கண்காணிப்பு கேமராவை ஜெபநிசாந்த் தனது செல்போனில் லிங்க் செய்து வைத்துள்ளார்.
6¾ பவுன் நகை திருட்டு
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெபநிசாந்தின் மனைவி மகனை பள்ளியில் இருந்து அழைத்து வர சென்றார். அப்போது ஏசாயா தயாராக வைத்து இருந்த கள்ளசாவியை பயன்படுத்தி பீரோவை திறந்து அதில் இருந்த 6¾ பவுன் நகையை திருடினார்.
அது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி ஜெபநிசாந்த் செல்போனில் தெரிய வந்தது. உடனே அவர் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தெரிவித்தார். அவர்கள் ஓடி வந்து வீட்டை சுற்றி நின்று ஏசாயாவை பிடித்து புதுக்கடை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொழிலாளி கைது
அதைத்தொடர்ந்து தொழிலாளி ஏசாயாவை போலீசார் கைது செய்து, அவர் திருடிய நகையை மீட்டு விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.