தொழிலாளர் நல நிதி செலுத்துபவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


தொழிலாளர் நல நிதி செலுத்துபவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x

தொழிலாளர் நலநிதி செலுத்தும் தொழிலாளர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் முருகப்பிரசன்னா தெரிவித்து உள்ளார்.

திருநெல்வேலி

1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நலநிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 என கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழிலாளர் நலநிதி தொகையினை வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.

அதன்படி 2023-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியினை 31.1.2024-க்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு தொழிலாளர் நலநிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.12 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை, பாடநூல் வாங்க உதவித்தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்புகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ஆகிய திட்டங்களுக்கு தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த உதவித்தொகை பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் வாரியத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.12.2023 ஆகும். விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் "செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு 31.12.2023-க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இந்த தகவலை நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளார்.


Next Story