ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை அதிகாரி கைது
சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
தாம்பரம்,
சென்னை அடுத்த மேற்கு தாம்பரம், வ.உ.சி தெருவில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி ஆய்வாளராக பொன்னிவளவன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளில் மிரட்டி மாதம், மாதம் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக பெற்று வந்ததாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், தாம்பரம், பழைய பெருங்களத்தூர், சிட்லபாக்கம், ராஜேந்திர பிரசாத் சாலை என தாம்பரம் சுற்றுவட்டாரபகுதிகளில் 4 இடங்களில் ராஜா ரமேஷ் என்பவர் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார்.
லஞ்சம் கேட்டு மிரட்டல்
இந்நிலையில் சிட்லபாக்கம் கிளை சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்ற பொன்னிவளவன் ஆய்வு மேற்கொள்வது போல் கடை உரிமையாளரிடம் மாதாமாதம் கடைகளிலிருந்து கொடுக்க வேண்டிய பணத்தை கொடுப்பதில்லையே என கேட்டு தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் கடையின் உரிமையாளர் ராஜா ரமேஷ் உதவி ஆய்வாளரை அலுவலகத்தில் சென்று சந்தித்தபோது, ரூ.50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு உரிமையாளர் ராஜா ரமேஷ் மறுப்பு தெரிவித்து எதற்காக பணம் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய போது நீங்கள் பணம் கொடுக்கத் தேவையில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறி மிரட்டி அனுப்பியுள்ளார்.
பின்னர் சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட்டில் பல்வேறு விதிமுறை மீறல்கள் உள்ளது போல 2 பக்கத்திற்கு நோட்டீஸ் தயாரித்து ராஜா ரமேசுக்கு அனுப்பியுள்ளார்.
கைது
பின்னர் ராஜா ரமேஷ் இது குறித்து பொன்னிவளவனிடம் கேட்டபோது, மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் ரூபாய் தனக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியதோடு முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் கொடுக்க சொல்லி கேட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ராஜா ரமேஷ் லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை நகர சிறப்பு பிரிவில் புகார் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை நகர சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மாலா தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜாரமேஷிடம் கொடுத்துள்ளனர்.
ரூ.10 ஆயிரம் ரூபாயை ராஜா ரமேஷ் உதவி ஆய்வாளர் பொன்னிவளவனிடம் கொடுத்த போது கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கைது செய்தனர்.