குறுவை சாகுபடி பணிகள் மும்முரம்


குறுவை சாகுபடி பணிகள் மும்முரம்
x

திருமருகல் பகுதியில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திருமருகல் பகுதியில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் அணை திறப்பு

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு முன்னதாக மே மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை சாகுபடி பணியை தொடங்கினர்.

ஆழ்குழாய் நீர்ப்பாசன வசதியுள்ள விவசாயிகள் முன்னதாகவே குறுவை சாகுபடி பணிகளை தொடங்குவது வழக்கம். இது முன்பட்ட குறுவை சாகுபடி பணி என அழைக்கப்படுகிறது.

குறுவை சாகுபடி

திருமருகல் ஒன்றியத்தில் அம்பல், பொறக்குடி, கணபதிபுரம், சேஷமூலை, ஆலத்தூர், போலகம், பண்டாரவடை, திருப்புகலூர் உள்ளிட்ட திருமருகல் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.

அம்பல் உள்ளிட்ட சில இடங்களில் நாற்றங்கால்களில் விடப்பட்டிருந்த நெல் நாற்றுகளை பறித்து நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆழ்குழாய் பாசனத்தை வைத்து பணிகளை தொடங்கினாலும், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் தொடர்ந்து சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மும்முனை மின்சாரம்

நாற்று பறித்தல், நடவு நடுவதற்கு வயல்களை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த குறுவை சாகுபடி பணிகளில் தொடர்ந்து ஈடுபட முறை வைக்காமல் தண்ணீர் வழங்க வேண்டும். மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

தேவையான உரம், பூச்சிமருந்து, நுண்ணுயிர் மருந்துகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story