மொடக்குறிச்சியில் கலவரத்தை தூண்டியதாக வடமாநில ஒப்பந்ததாரர்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
மொடக்குறிச்சியில் கலவரத்தை தூண்டியதாக வடமாநில ஒப்பந்ததாரர்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு
மொடக்குறிச்சியில் கலவரத்தை தூண்டியதாக வடமாநில ஒப்பந்ததாரர்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கலவரங்கள்
மொடக்குறிச்சி அருகே தனியார் மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் பணியாற்றிய பீகார் மாநிலம் சாம்பாரல் கிழக்கு மாவட்டம் ராம்பூர்வா கிராமம் சத்ய நாராயணன் மகன் காமோத் ராம் (வயது 30) கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது, மில்லிற்கு வெளியே வந்தபோது, மில்லிற்குள் பாரம் ஏற்ற பின் நோக்கி வந்த சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக காமோத்ராம் மீது மோதியது.
இதில், வாகனத்தின் சக்கரம் ஏறியதில் காமோத்ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து காமோத்ராமின் உடலை எடுக்க விடாமல் அதே மில்லில் வேலை பார்க்கும் சக வடமாநில தொழிலாளர்கள், நிர்வாகத்திடம் நஷ்ட ஈடு கேட்டு போராடினர். மேலும், நிறுவனத்தின் பொருட்களை அடித்து நொறுக்கி, கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார்களையும் ஆயுதங்களுடன் தாக்கி வன்முறையில் ஈடுபட்டு, போலீசார் வாகனங்களையும் சேதப்படுத்தினர். இதில் 11 போலீசார் காயமடைந்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இதுதொடர்பாக மொடக்குறிச்சி போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 40 வடமாநில தொழிலாளர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்களான பீகார் மாநிலம் சுகலி மாவட்டத்தை சேர்ந்த ராம் சாகர் குமார் (24), பீகார் தாஸ்கேமாத் மாவட்டத்தை சேர்ந்த விஜய் பகத் (34), பீகார் சென்வாரியா பகுதியை சேர்ந்த சிவநாத்தாஸ் மகன் அனில்குமார் (20) ஆகிய 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரையின் பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது.