4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பல்லடத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பல்லடத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
4 பேர் படுகொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருேக உள்ள கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 49). இவருடைய தாயார் புஷ்பவதி. மோகன்ராஜின் சித்தி ரத்தினம்பாள், பெரியப்பா மகன் செந்தில்குமார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி இவர்கள் 4 பேரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். வீட்டிற்கு வரும் வழியில் அமர்ந்து மது குடித்ததை தட்டிக்கேட்டதால் இந்த கொலை நடந்தது.
இதையடுத்து கொலை தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (54), இவருடைய மகன் வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார் (27), திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து (24), தேனி மாவட்டம் உத்தமபாளையம் முத்தாலபுரம் பகுதியை சேர்ந்த விஷால் என்கிற சோனை முத்தையா (20) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
விசாரணையின் போது தப்பிக்க முயன்ற செல்லமுத்து கால் முறிவு ஏற்பட்டது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வெங்கடேஷ் என்கிற ராஜ்குமாரை விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயன்றதால் அவரது கால்களில் சுட்டுப் பிடிக்கப்பட்டார்.
அதன்பின்னர் 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் மீதும் அரியநாயகிபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் கலெக்டர் கிறிஸ்துராஜிக்கு பரிந்துரை செய்தார். அதன்படி 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடம் வழங்கப்பட்டது.