விடுபட்ட சாமி சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம்
விடுபட்ட சாமி சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
சுடு களிமண்ணாலான சாமி சிலைகள்
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான பெரியசாமி மலைக்கோவில், அருகே உள்ள மலையில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந்தேதி நடைபெற்றது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெரியசாமி மலைக்கோவிலில் உள்ள சுடு களிமண்ணால் செய்யப்பட்ட சாமி சிலைகளை நாதன் என்பவர் உடைத்து சேதப்படுத்தினார்.
அந்த சிலைகளை புதிதாக பிரதிஷ்டை செய்ய பாலாயம் நடத்தப்பட்டு, புதுச்சேரி மாநிலத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் சுடு களிமண்ணால் அந்த சாமி சிலைகள் செய்யப்பட்டு, மலைக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
செல்லியம்மனுக்கு மட்டும் முறையாக...
இதைத்தொடர்ந்து பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 27-ந் தேதி நடத்தப்பட்டது. அப்போது செல்லியம்மன் சிலை மட்டும் முறையாக முழுமையாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெரியசாமி உள்ளிட்ட சாமி சிலைகள் முழுமையாக பிரதிஷ்டை செய்யப்படவில்லை. இதனால் செல்லியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பெரியசாமிக்கு கால் பாதத்தில் மட்டும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோவில் சாமி சிலைகள் முழுமையாக பிரதிஷ்டை செய்யப்படாமல் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டதால், கும்பாபிஷேகத்தை மீண்டும் நடத்த கோரி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கோரிக்கை எழுந்தது.
விடுபட்ட சாமி சிலைகளுக்கு கும்பாபிஷேகம்
இந்த நிலையில் பெரியசாமி மலைக்கோவிலிலும், அதனை சுற்றியுள்ள உபகோவில்களிலும் சுடு களிமண்ணால் செய்யப்பட்ட சாமி சிலைகள் முழுமையாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை விடுபட்ட சாமி சிலைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி அதிகாலை பூஜை முடிந்து காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் பெரியசாமி மலைக்கோவிலில் உள்ள பெரியசாமி மீது சிவாச்சாரியார்கள் முன்னிலையில் பூசாரிகள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர்.
அதனை தொடர்ந்து லாடசாமி, நாக கன்னியம்மன், செங்கமலை அய்யான், பொன்னுசாமி அய்யான், கொறபுள்ளியான் சுவாமி, ஆத்தடியார் சுவாமி, கிணத்தடியார் உள்ளிட்ட சாமி சிலைகளின் மீது பூசாரிகள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டினர். கோவிலில் பெண் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லாததால், ஆண் பக்தர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.