வரதராஜபெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ெவள்ளாளபுரம் சின்னப்பம்பட்டியில் வரதராஜபெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி தீர்த்தக்கூட ஊர்வலத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இளம்பிள்ளை:-
சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் சின்னப்பம்பட்டியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் உபசன்னதியான ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று சந்தைப்பேட்டையில் இருந்து யானை, குதிரை, காளைகள், ஒட்டகங்கள், மற்றும் தாரை, தப்பட்டை மேள, தாளத்துடன் பக்தர்கள் புனித தீர்த்த குடங்களை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தனர். இதில் திரளானவர்கள் பங்கேற்றனர். மாலையில் முதற்கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து 2-ம் கால யாக பூஜை, மூல மந்திரஹோமம் நடந்தது. தெய்வங்களுக்கு கண்திறப்பும், கோபுரகலசங்களுக்கு பிரதிஷ்டை செய்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலையில் 3-ம் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து நாளை அதிகாலை 4-ம் கால யாக பூஜை நடக்கிறது. கோபுர கலத்திற்கு புனித தீர்த்தகுடங்கள் மேள தாளத்துடன் கொண்டு செல்லப்பட்டு புனித தீர்த்தம் ஊற்றி காலபைரவர் மற்றும் 63 நாயன்மார்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 8 மணியில் இருந்து 9.30 மணிக்குள் கோபுரகலசங்களுக்கும், ரங்கநாதபெருமாள், பரிவார தேவதைகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.