கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம்: பா.ஜனதா-தமிழ் அமைப்பினர் கடும் வாக்குவாதம்


கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம்: பா.ஜனதா-தமிழ் அமைப்பினர் கடும் வாக்குவாதம்
x

கோவில்களில் தமிழில் கும்பாபிேஷகம் நடத்துவது தொடர்பாக நெல்லையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பா.ஜனதா, தமிழ் அமைப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

கோவில்களில் தமிழில் கும்பாபிேஷகம் நடத்துவது தொடர்பாக நெல்லையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பா.ஜனதா, தமிழ் அமைப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்து கேட்பு கூட்டம்

சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவுப்படி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் குழு உறுப்பினர்களான குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், செந்தமிழ் வேள்வி சதூரர் சக்திவேல் முருகனார், குமரலிங்கனார், சுகிசிவம், கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் கூடுதல் ஆணையாளர் ஹரிபிரியா, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையா்கள் கவிதா பிரியதர்ஷினி, அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இந்து ஆர்வலர்கள், சிவனடியார்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

சிவனடியாா்கள் எதிர்ப்பு

கூட்டம் தொடங்கிய உடன் சிலர் மேடை அருகே சென்று அறநிலையத்துறை கூட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரில் இந்து கடவுள்களின் படம் இடம்பெறவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்து கடவுள்களின் படம் வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தும்போது தமிழ் பக்தி பாடல்களை சேர்ப்பது தொடர்பாக குழு உறுப்பினர் சுகிசிவம் பேசிய கருத்துக்கு சிவனடியார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடும் வாக்குவாதம்

பின்னர் கும்பாபிஷேகம், ஆகம விதிப்படி சமஸ்கிருதத்தில் நடத்த வேண்டும் என வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர், பொதுச்செயலாளர் சுரேஷ் தலைமையிலான பா.ஜனதாவினரும், முருகானந்தம், பிரம்மநாயகம் தலைமையிலான இந்து முன்னணியினரும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் இதற்கு வியனரசு தலைமையிலான தமிழ் தேச தன்னுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கருத்து கூறினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணக்குமார் தலைமையிலான போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். மேலும் அங்கு கூடுதல் போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

விண்ணப்பம்

தொடர்ந்து இந்து முன்னணியினர் ஆகம விதிப்படி தான் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று மனு கொடுத்தனர். அதுபோல் வியனரசு கொடுத்த மனுவில், தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜசோழன் அந்த கோவிலின் பெரிய சிவலிங்கத்தை கரூர்தேவர் என்னும் தமிழ் சித்த முனிவரை கொண்டே பிரதிஷ்ைட செய்துள்ளார். தமிழ் மொழியில் பல்வேறு பக்தி பாடல்கள் உள்ளன. எனவே கோவிலில் கும்பாபிஷேகங்களை தமிழ் மொழியில் தான் நடத்த வேண்டும் என்று கூறினார்.

பின்னர் அறநிலையத்துறை சார்பில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கலந்து கொண்ட அனைவருக்கும் கருத்து கேட்பு விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதை பலர் நிரப்பி கொடுத்தனர்.

அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்

இதுகுறித்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறுகையில் 'தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து கோர்ட்டு உத்தரவுப்படி கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இங்கு கூறிய கருத்துக்களை அரசு மூலம் கோர்ட்டுக்கு அனுப்பி வைப்போம்' என்றார்.


Next Story