கங்காதீஸ்வரர், கல்யாண வரதராஜ பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம்


கங்காதீஸ்வரர், கல்யாண வரதராஜ பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு கங்காதீஸ்வரர், கல்யாண வரதராஜபெருமாள் கோவில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

13-ம் நூற்றாண்டு கோவில்கள்

சின்னசேலம் நகரில் 13-ம் நூற்றாண்டில் சுந்தரபாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட காமாட்சி அம்பாள் சமேத கங்காதீஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வரதராஜ பெருமாள் கோவில்கள் உள்ளன. மிகப்பழமையான இந்த கோவில்களில் 21 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நேற்று காலையில் கோலாகலமாக நடைபெற்றது.

கங்காதீஸ்வரர்

முன்னதாக கங்காதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வானம், கணபதி, நவக்கிரக ஹோமம், தனபூஜை உள்ளிட்ட பூஜைகளும்., மாலையில் தீர்த்தசங்கிரஹணம், வாஸ்து சாந்தி, கிராமசாந்தி, பிரவேச பலி, ரக்க்ஷோக்ன ஹோமமும், 2-ந் தேதி காலையில் சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், பரிவாரகலா கர்சனம் உள்ளிட்ட பூஜைகளும், மாலையில் முதல் கால யாக பூஜை, 3-ந் தேதி காலையில் 2-வது கால யாக பூஜை, பாவனாபிஷேகம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.

பின்னர் நேற்று அதிகாலை 4 மணிக்கு 4-வது கால யாக பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, நாடி சந்தானம், மகா தீபாராதனை, யாத்ரா தானம் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணி அளவில் யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று காலை 7.30 மணியளவில் கங்காதீஸ்வரர் கோவில் ராஜ கோபுரம் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களின் கோவில் விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வரதராஜபெருமாள்

அதேபோல் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா 2-ந் தேதி மகா சுதர்சன வேள்வி மற்றும் யாகசாலை, வாஸ்து பூஜையுடன் தொடங்கியது. பின்னர் காலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜை, அங்குராற்பணம், அக்னி பிரதிஷ்டை, கும்ப பூஜை, பூர்ணாஹுதி தீபாராதனை, பிரசாத வினியோகத்துடன் நடைபெற்றது. பின்னர் 3-ந் தேதி 2-வது கால, 3-வது கால யாக பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து நேற்று காலை 7 மணியளவில் 4-வது கால யாக பூஜையும் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு காலை 9:45 மணிக்கு மூலவர் வரதராஜபெருமாள் கோவில் விமானம், பரிவார தெய்வங்களின் கோவில் விமானங்கள், மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு விழா குழு சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

முன்னதாக கும்பாபிஷேகத்தை யொட்டி நகரம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. விழாவில் சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. உதயசூரியன், ஆரிய வைசிய சமூக தலைவரும், தொழிலதிபருமான எஸ்.வி.ஏ.ரவீந்திரன், பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யாஜெய்கணேஷ், துணை தலைவர் ராகேஷ், செங்குந்தர் மகாஜன சங்க தலைவர் ஏ.எஸ்.எம்.பி.பரமசிவம் மற்றும் ராஜி, காந்தி, சத்யா உள்ளிட்ட திருப்பணி குழு கவுரவ தலைவர்கள், நகர ஜவுளி, நகை, மளிகை, பாத்திரக்கடை உரிமையாளர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாய சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தீயணைப்பு வாகனத்தின் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.


Next Story