குமாரபாளையம் தாலுகா அலுவலக கட்டுமான பணி எப்போது முடியும்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
குமாரபாளையம்:
குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலக கட்டுமான பணி எப்போது முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
அந்நிய செலாவணி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கைத்தறி மூலம் பட்டுப்புடவை உற்பத்தி, விசைத்தறி மூலம் லுங்கி (கைலி), கர்ச்சீப், துண்டு, பெட்சீட், ரேப்பியர், சுல்சர் வகை வெளிநாட்டு விசைத்தறிகள் மூலம் சட்டை மற்றும் ஏற்றுமதி துணி ரகங்கள், சாயத் தொழில்கள், நூற்பாலை, ஜவுளி சார்ந்த தொழில்கள் மிகுதியாக நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் துணி ரகங்கள் உள்நாட்டு தேவைகளுக்கு மட்டும் இன்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் நாட்டிற்கு அந்நிய செலாவணி வர்த்தகத்தையும், வருவாயையும் ஈட்டிக் கொடுக்கிறது.
இதுதவிர கலை, அறிவியல் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள் போன்ற அனைத்து கல்லூரிகளும் இங்கு செயல்பட்டு வருகிறது.
தொழில் பெருக்கத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக இப்பகுதியில் வந்து குடியேறினர். இதன் காரணமாக சாதாரண ஊராட்சி பகுதியாக இருந்த குமாரபாளையம் கடந்த 1965-ம் ஆண்டு முதல் பேரூராட்சியாகவும், 1978-ம் ஆண்டு முதல் 3-ம் நிலை நகராட்சியாகவும் 1984-ம் ஆண்டு முதல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1990-ம் ஆண்டு முதல் முதல்நிலை நகராட்சியாகவும் விளங்குகிறது.
தாலுகா அலுவலகம்
தற்போது இந்த நகரில் மட்டும் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மக்கள் நெருக்கம் மிகுந்த இந்நகரில் வாழ்கின்ற பொதுமக்கள் அரசாங்கத்தின் உதவியை பெற, அரசாங்க சான்றிதழ் பெற திருச்செங்கோட்டை நோக்கி படையெடுத்து வந்தனர். இதனால் கால விரயம், பண விரயம் ஆனது.
இதற்காக பொதுமக்கள் குமாரபாளையத்தில் தாலுகா அலுவலகம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கையை விடுத்து வந்தனர். இதன் விளைவாக கடந்த 2014 -ம் ஆண்டு குமாரபாளையம் தாலுகா ஏற்படுத்தப்படும் என சட்டசபையில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக குமாரபாளையத்தில் நகராட்சிக்கு சொந்தமான அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் தாலுகா அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது வரை தாலுகா அலுவலகம் வாடகை கட்டிடத்தில் தான் இயங்குகிறது.
90 சதவீத பணிகள் நிறைவு
இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு சுமார் ரூ.2 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் தாசில்தார் அலுவலகம் மற்றும் தாசில்தார் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள பயணியர் மாளிகை வளாகத்தில் தொடங்கப்பட்டது. 90 சதவீதம் பணிகள் நிறைவுற்ற நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாக கடந்த 1½ ஆண்டுகளாக எந்த பணியும் நடைபெறாமல் செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி காணப்படுகிறது.
இன்னும் 10 சதவீத பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ள நிலையில், விரைவில் அதனை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வேதனையாக உள்ளது
இதுகுறித்து குமாரபாளையம் மக்கள் நீதிமய்யம் கட்சியை சேர்ந்த சித்ரா பாபு கூறியதாவது:- குமாரபாளையம் தாலுகா அலுவலகம் இங்கு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி கொண்டு வந்தோம். ஆனால் அந்த தாலுகா அலுவலகம் இன்னும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவது வேதனைக்கு உரியது. குமாரபாளையம் தாலுகா அமைந்த பிறகு தாலுகா அந்தஸ்துக்கு உரிய எந்த ஒரு வசதியும் இங்கு ஏற்படுத்தி தரவில்லை. குறிப்பாக மருத்துவமனை தரம் உயர்த்தப்படாமல் உள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலேயே அதிகப்படியான ஏழை, எளியவர்கள் அரசு மருத்துவமனையை பயன்படுத்தி வருவது குமாரபாளையத்தில் தான். இங்கு போதிய வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. குமாரபாளையத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட தாலுகா எல்லாம் சொந்த கட்டிடங்களில் இயங்கும்போது இங்கு மட்டும் அரசு பணிகள் மெத்தனமாக நடைபெறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. அரசாங்கம் காலதாமதம் செய்யாமல் பொதுமக்கள் நலன்கருதி விரைவில் பணிகளை முடித்து, தாலுகா அலுவலக கட்டிடத்தை திறக்க வேண்டும்.
திறப்பு விழா எப்போது?
சமூக சேவகர் காவிரி நகர் பிரகாஷ்:-
குமாரபாளையம் மக்களின் வாழ்க்கை தரம் உயர தாலுகா அலுவலகம் அவசியம் என்பதை வலியுறுத்தி அனைத்து கட்சியினரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தோம். அதன் விளைவாக தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டது. ஆனால் தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. அரசு கட்டிடங்கள் வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது.
இதே போல் குமாரபாளையம் தாலுகா அலுவலக கட்டுமான பணி முடிந்தவுடன் தீயணைப்பு நிலையம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், நீதிமன்றம் ஆகிய வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அனைத்து அலுவலகமும் சொந்த கட்டிடத்தில் இயங்கும் வகையில் அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது குமாரபாளையம் தாலுகா அலுவலக கட்டிட பணிக்கு சுமார் ரூ.85 லட்சம் வந்து உள்ளதாக நம்ப தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் கட்டிடத்திற்கு டைல்ஸ் பதிக்கும் பணிகள், பெயிண்டு பணிகள் நடைபெற்று விரைவில் திறப்பு விழா காண வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம் ஆகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குமாரபாளையம் தாலுகா அலுவலக புதிய கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சி, படைவீடு, ஆலாம்பாளையம் பேரூராட்சிகள், பள்ளிபாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட 15 சிற்றூராட்சிகள், திருச்செங்கோடு ஒன்றியத்துக்குட்பட்ட 3 சிற்றூராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.