குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் 8 ஊர் சாமிகளின் தீர்த்தவாரி


குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் 8 ஊர் சாமிகளின் தீர்த்தவாரி
x

தைப்பூச திருவிழாவையொட்டி குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் 8 ஊர் சாமிகளின் தீர்த்தவாரி நடைபெற்றது.

கரூர்

தைப்பூச திருவிழா

தைப்பூச திருவிழாவையொட்டி குளித்தலை கடம்பவனேசுவரர், அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர், ராஜேந்திரம் மத்தியார்சுனேசுவரர், கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பெட்டவாய்த்தலை மத்தியார்சுனேசுவரர், திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர், முசிறி சந்திரமவுலீசுவரர், வெள்ளூர் திருக்காமேசுவரர் ஆகிய 8 கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் எதிரே உள்ள கடம்பந்துறை காவிரி ஆற்றின் கரைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் காவிரி ஆற்றில் 8 ஊர் சுவாமிகளின் தீர்த்தவாரி நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு தைப்பூச நாளான நேற்று குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் தவிர மீதமுள்ள 7 ஊர்களில் இருந்து சுவாமிகள் குளித்தலைக்கு கொண்டு வரப்பட்டன.

தீர்த்தவாரி

குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் அருகே 7 ஊர் சாமிகளுக்கு கடம்பவனேசுவரர் சுவாமி வரவேற்பு அளித்தார். பின்னர் 8 ஊர் சாமிகளும் கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் சுவாமியின் ஆயுதமாகவும் சுவாமி ஆகவே கருதப்படுவதுமான அஸ்திர தேவரை (சூலத்தை) அந்தந்த கோவில் குருக்கள் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு காவிரி ஆற்றில் ஒன்றாக மூழ்கி எழும் தீர்த்தவாரி நடைபெற்றது.

தைப்பூச நாளில் 8 ஊர் சாமிகளும் ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தீர்த்தவாரி முடிந்த பின்னர் அனைத்து சுவாமிகளும் சுவாமிகள் வைப்பதற்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

விடையாற்றி உற்சவம்

2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விடையாற்றி உற்சவம் நடத்தப்பட்டு அனைத்து சுவாமிகளும் அந்தந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு தீர்த்தவாரி நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story