குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல்அலுவலரை தாக்க முயற்சி


தினத்தந்தி 25 Oct 2023 12:15 AM IST (Updated: 25 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல்அலுவலரை தாக்க முயற்சி நடந்தது. இது தொடர்பாக தசரா குழுவை சேர்ந்த பதினைந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் கோவில் முன்பு ெசயல்அலுவலரை தாக்க முயன்ற சிறுநாடார் குடியிருப்பு தசரா குழுவை சேர்ந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செயல் அலுவலர்

குலசேகரன்பட்டினம் கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் வெங்கடேஸ்வரி (வயது 33). இவர் கடந்த 22-ந் தேதி இரவு 8.40 மணியளவில் கோவில் முன்பு திருவிழா ஊர்க்காவல் படையினருடன் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது சிறுநாடார்குடியிருப்பை சேர்ந்த தசரா குழுவினர் சுமார் 600 பேர் கும்பலாக கோவில் முன்பு வந்துள்ளனர். கூட்டநெரிசலாக இருப்பதால் 40 பக்தர்களை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தாக்க முயற்சி

அவர்கள் கோவிலுக்குள் சென்ற நிலையில், உடன் வந்தவர்களில் 15 பேர் செயல்அலுவலரை அவதூறாக பேசி, தடுப்பு வேலியை அகற்றி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் கோவில் முன்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், கூச்சல் குழப்பம் உருவானது. அத்துடன் செயல்அலுவலரை மிரட்டியதுடன், அவர்கள் கும்பலாக தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் செயல்அலுவலருக்கும், ஊர்க்காவல் படையை சேர்ந்த கணேஷ் என்பவரும் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

15 பேர் மீது வழக்கு

இதுகுறித்து வெங்கடேஸ்வரி அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், சிறுநாடார்குடியிருப்பை சேர்ந்த குறிப்பிட்ட தசரா குழுவை சேர்ந்த 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story