குளச்சல் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
வானிலை மையம் எச்சரிக்கையை தொடர்ந்து குளச்சல் மீனவர்கள் நேற்று 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.
குளச்சல்,
வானிலை மையம் எச்சரிக்கையை தொடர்ந்து குளச்சல் மீனவர்கள் நேற்று 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.
குளச்சல் மீனவர்கள்
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களும் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இதில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.
இந்தநிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும், கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.
2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
இதையடுத்து நேற்றுமுன்தினம் குளச்சல் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான விசைப்படகுகள் கரை திரும்பி வருகிறது. இதேபோல் வள்ளம், கட்டுமர மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஒரு சில வள்ளங்கள் மட்டும் மீன்பிடிக்க சென்றன. அவற்றில் குறைவான மீன்களே கிடைத்தன. இதேபோல் நேற்று 2-வது நாளாகவும் வள்ளம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரையோரம் அந்த வள்ளங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையே மீன்பிடிக்க சென்ற சுமார் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று பாதியிலேயே கரை திரும்பின.