கூடங்குளம் அணு உலைகள் மூலம் இதுவரை 94 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி
கடந்த 2010-ம் ஆண்டு முதல் கூடங்குளம் அணுமின் நிலைய சமூக மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சுற்றுப்புறத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்து வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் செட்டிகுளம் அணு விஜய் நகரியத்தில் குடியரசு தின விழாவையொட்டி அணுமின் நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.ஷாவந்த் தேசியக்கொடியேற்றி வைத்து பேசியதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2 அணு உலைகள் மூலம் இதுவரை 94 ஆயிரம் மில்லியன் யூனிட்டுக்கு அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 2 அணு உலைகள் மூலம் 14 ஆயிரத்து 226 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. முதல் அணு உலை கடந்த 2021 மார்ச் முதல் 638 நாட்கள் தொடர்ந்து இயங்கி மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. 3 மற்றும் 4-வது அணு உலைகளின் கட்டுமான பணிகள் 69 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. 5 மற்றும் 6-வது அணு உலைகளின் கட்டுமானமும் 22 சதவிகிதத்தை எட்டி முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு முதல் கூடங்குளம் அணுமின் நிலைய சமூக மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சுற்றுப்புறத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்து வருகிறது. கடந்த நிதியாண்டு வரை கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ரூ.98.92 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. நடப்பு நிதியாண்டில் சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.19.74 கோடியில் செயல்படுத்தும் பணிகள் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
சுற்றுப்புற கிராம மக்களுக்கு சுகாதார உதவிக்காக நடமாடும் மருத்துவ ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. 100 உள்ளூர் இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. 19 கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.89 லட்சத்தில் 28 குப்பை சேகரிப்பு மின் ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுசக்தி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் தினமும் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.