சங்கரநாராயண சுவாமி கோவிலில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் - சீமான் பேட்டி


சங்கரநாராயண சுவாமி கோவிலில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் - சீமான் பேட்டி
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்று சீமான் கூறினார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

நாம் தமிழர் கட்சி சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தபசுநகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் குடமுழுக்கு பணி நடைபெற்று வருகிறது. குடமுழுக்கு நடைபெறும்போது தமிழில் நடத்த வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் அனைத்து கோவில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கை என்பது 2018-ல் போடப்பட்ட வழக்கின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சிலர் கூறுகிறார்கள். இது முழுக்க அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் அரசாங்கத்துக்கு எதிராக கருத்துகள் பதிவிடுவோரை கைது செய்கிறார்கள். இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மத்திய அரசால் தி.மு.க.வினர் கைது செய்யப்படும்போது ஜனநாயக படுகொலை என்று சொல்லும் தமிழக முதல்வர், தி.மு.க. ஆட்சியில் அரசாங்கத்துக்கு எதிராக கருத்து பதிவிடுவோர் ஏன் கைது செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து விளக்க வேண்டும்.

தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று நீண்ட நாட்களாக போராடி வருகிறார்கள். அதனை அரசாங்கம் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் இலாகா மாற்ற பரிந்துரையை ஏற்று கவர்னர் செயல்பட வேண்டும்.

தென்காசி மாவட்டம் முழுவதும் கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது. மக்கள் போராட்டம் நடத்தியும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மாதம் கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 5 பேர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி இறந்தனர். அவர்களுக்கு தமிழக அரசு எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை. ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் கொடுத்து உள்ளனர். இது நியாயமற்றது.

அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றை பாட புத்தகங்களில் இடம்பெற செய்ய வேண்டும். நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலைக்கு அய்யா வைகுண்டரின் பெயரை சூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.


Next Story