மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் மறியல் போராட்டம் பயிற்சி முகாம் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேச்சு
மத்திய மக்கள் விரோத பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 28-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி வரை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் பயிற்சி முகாம் கூட்டத்தில் கே.எஸ். அழகிரி தெரிவித்து உள்ளார்.
சென்னை,
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், காங்கிரஸ் கட்சியின் கொள்கை பிரகடன பயிற்சி முகாம் கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்றது.
முகாமின் நிறைவு நாளான நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார்.
கூட்டத்தில் தேசிய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், விஜயதாரணி எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர்கள் எஸ்.காண்டீபன், எம்.எஸ்.காமராஜ், தளபதி பாஸ்கர், மாவட்டத் தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.பி. ரஞ்சன் குமார், நாஞ்சில் பிரசாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மறியல் போராட்டம்
கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-
இந்த பயிற்சி முகாமில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு என்னவென்றால் மத்திய மக்கள் விரோத பா.ஜ.க. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் வருகிற 28-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி வரை மாபெரும் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி மாவட்டம் தோறும் 75 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மத்திய பா.ஜ.க. அரசின் தவறுகளை எடுத்துக் கூறுவதுடன் காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தங்களை மக்களிடம் எடுத்துக் கூற உள்ளோம்.
பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வினர் தமிழகத்தில் நமது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை சிதைக்க பார்க்கிறார்கள்.
மாயை
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை என்று மக்கள் முடிவு செய்தனர். நமது கூட்டணியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றால் அ.தி.மு.க.வினர் முதல்-அமைச்சராக இருக்க மாட்டார்கள். மோடிதான் முதல்-அமைச்சராக இருப்பார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்படி நமது வெற்றி விகிதம் 72 சதவீதம் ஆகும். இது மதசார்பற்ற கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகும். ஆனால், பா.ஜ.க.வினர் தமிழகத்தில் 4 இடங்களில் வெற்றி பெற்று கொண்டு அவர்கள் வளர்ந்து விட்டதாக கூறுவது ஒரு மாயை.
மக்களை ஒன்றுபடுத்தும் கடமை
பா.ஜ.க.வினரின் மக்களை சாதி, மதத்தால் பிளவு படுத்துகிறார்கள். எனவே மக்களை ஒன்றுபடுத்தும் கடமை நமக்கு இருக்கிறது.
பா.ஜ.க.வினர் தவறான மத உணர்வை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிராக காங்கிரசார் கடுமையாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். எனவே பா.ஜ.க.வை கண்டித்து நடத்தும் மறியல் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.