கிருஷ்ண ஜெயந்தி விழா
காரைக்குடி அருகே உள்ள நாச்சியாபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள நாச்சியாபுரத்தில் சாய்பாணி பாபா கோவில் உள்ளது. இங்கு ஊஞ்சலில் சாய்பாபா படுத்திருக்கும் நிலையில் சிலிக்கானால் உருவாக்கப்பட்ட தத்ரூபமான சாய்பாபா சிலை உள்ளது. இது இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது. ஒன்று வட இந்தியாவில் உள்ளது. மற்றொன்று இக்கோவிலில் உள்ளது. இக்கோவிலின் பசுமடத்தில் 40 பசுக்களும் உள்ளது. இப்பசு மடத்தில் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு பெற்றது. விழாவையொட்டி பசுமடத்தில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பசுக்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. ராதை, கிருஷ்ணர் வேடங்களில் வந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறும்போது, 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்களின் இறைப்பணிகளை இன்றைய சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் பசுமடத்தில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் சிலைகள் அமைக்கப்பட உள்ளது. அங்கிருந்து காரைக்குடிக்கு கொண்டு வரப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் வைத்து வேள்விகள், யாகங்கள் நடத்தப்பட்டு நாயன்மார்கள், ஆழ்வார்கள் புகழை எடுத்துச் சொல்லி அங்கிருந்து ஊர்வலமாக பாபா கோவில் சென்று பசுமடத்தில் விழா எடுத்து பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என்றார்.