கே.பி.ராமலிங்கம் சிறையில் அடைப்பு
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் நேற்று மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் போலீசாருடன் வர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் நேற்று மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் போலீசாருடன் வர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கே.பி.ராமலிங்கம் கைது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கே.பி. ராமலிங்கம். முன்னாள் எம்.பி.யான இவர் பா.ஜ.க. மாநில துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். கடந்த வாரம் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சிவா நினைவு இடத்தில் உள்ள பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கட்சியினருடன் ஊர்வலமாக சென்றார்.
அப்போது போலீசார் அனுமதி மறுத்ததால் அங்குள்ள பாரத மாதா சிலையின் முன்பு இருந்த கேட்டை உடைத்து உள்ளே சென்றதாக கே.பி.ராமலிங்கம் மீது பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ராசிபுரத்தில் தனது வீட்டில் இருந்த அவரை போலீசார் அங்கு சென்று கைது செய்தனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
ஆனால் அவருக்கு ரத்த கொதிப்பு, நெஞ்சு வலி உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாகவும், எனவே, ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டும் என்று அவர் கூறினார். இதையடுத்து சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 14-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரது கைதுக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜனதா கட்சியினர் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக கே.பி.ராமலிங்கம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இதனிடையே, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க பென்னாகரம் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதேசமயம், தொடர் சிகிச்சையில் இருந்து வந்த கே.பி.ராமலிங்கத்திற்கு உடல்நல பாதிப்பு இல்லை என டாக்டர்கள் சான்றிதழ் கொடுத்தனர். ஆனால் அவர் சிறைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
சிறையில் அடைப்பு
இந்த நிலையில், பாப்பாரப்பட்டி போலீசார் நேற்று மதியம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கே.பி.ராமலிங்கத்தை கைது செய்ய சென்றனர். ஆனால் அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி சிறைக்கு வர மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அவரை போலீசார் வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றி சேலம் மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.