கோயம்பேடு - ஆவடி பணிக்கான சாத்தியகூறு அறிக்கை - மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்
சென்னை புறநகர் பகுதிகளான சிறுசேரி - கிளாம்பாக்கம், பூந்தமல்லி- பரந்தூர், கோயம்பேடு - ஆவடி ஆகிய பகுதிகளையும் மெட்ரோ ரெயில் சேவையுடன் இணைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
வழித்தடங்கள் நீட்டிப்பு
சென்னையின் புறநகர் பகுதிகளையும் மெட்ரோ ரெயில் சேவையுடன் இணைக்கத் மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது, 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி வரையிலான 3-வது வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கவும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை நீட்டிக்கவும், மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல் கட்டமாக சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த அறிக்கை தற்போது நிறைவடைந்துவிட்டதாகவும், அதனை தமிழக அரசிடம் வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
சாத்திய கூறு அறிக்கை
சென்னை புறநகர் பகுதிகளான சிறுசேரி - கிளாம்பாக்கம், பூந்தமல்லி- பரந்தூர், கோயம்பேடு - ஆவடி ஆகிய பகுதிகளையும் மெட்ரோ ரெயில் சேவையுடன் இணைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பூந்தமல்லி- பரந்தூர் செல்ல 50 கி.மீ., கோயம்பேடு - ஆவடிக்கு திருமங்கலம் முகப்பேர் வழியாக செல்ல 17 கி.மீ. சிறுசேரி - கிளாம்பாக்கம் செல்ல 26 கி.மீ. என மொத்தம் 93 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தது.
இந்த சாத்தியக்கூறு அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்ட நிலையில் அடுத்த 2 வாரத்துக்குள் தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. இதையடுத்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.