கோவில்பட்டி கடலை மிட்டாய்காலை உணவு திட்டத்தில் சேர்க்கப்படுமா?:அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்


கோவில்பட்டி கடலை மிட்டாய்காலை உணவு திட்டத்தில் சேர்க்கப்படுமா?:அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
x
தினத்தந்தி 26 Oct 2023 12:15 AM IST (Updated: 26 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கடலை மிட்டாய் காலை உணவு திட்டத்தில் சேர்க்கப்படுமா? என்பதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி கடலை மிட்டாய் காலை உணவு திட்டத்தில் சேர்க்கப்படுமா? என்பதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்தார்.

அமைச்சர் திடீர் ஆய்வு

கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கல்வி மாவட்ட அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று மாலையில் திடீர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்குள்ள தொடக்க கல்வி அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்ட அவர், கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்ட புத்தகங்கள், புத்தகப்பைகள், சீருடைகள் போன்றவற்றையும் பார்வையிட்டார்.

மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கல்வி அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் 10-ம் வகுப்புக்கு சென்று மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளிக்கூடத்தை புதுப்பிக்க...

105 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை பார்வையிட்டேன். இது நான் பார்த்த பள்ளிக்கூடங்களிலேயே மிகப்பெரிய வளாகத்தை கொண்டுள்ளது. இங்கு 'ஆக்கியின் தந்தை' என்று அழைக்கப்படும் தயான்சந்த் தங்கியிருந்து பயிற்சி அளித்தது பெருமைக்குரிய விஷயம் ஆகும்.

100 ஆண்டுகளைக் கடந்த பள்ளிகளை பழமை மாறாமல் புதுப்பிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் அடுத்த ஆண்டில் சேர்த்து புதுப்பிக்கப்படும். மேலும் மழைக்காலத்தில் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், கலையரங்கை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

காலை உணவில் கடலை மிட்டாய்

தமிழ்நாட்டில் காலை உணவு திட்டத்தில் சுமார் 31 ஆயிரம் பள்ளிகளில் 17.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இதனை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பாக நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார். இத்திட்டம் தெலுங்கானா மாநிலத்திலும் செயல்படுத்தப்படுவது பெருமையாக உள்ளது. காலை உணவு திட்டத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாய் சேர்க்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். இதுதொடர்பாக, சமூக நலத்துறை அமைச்சரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் பள்ளிக்கல்வித் துறை சம்பந்தமாக 32 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதில், 29 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியர்களின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் நிகழ்வாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். நிதி நிலைமைக்கு ஏற்ப அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story