சங்கிலி கருப்பராயன் சாமி கோவில் சிறப்பு பூஜை


சங்கிலி கருப்பராயன் சாமி கோவில் சிறப்பு பூஜை
x
திருப்பூர்


அமாவாசையன்று சேவூர் சங்கிலி கருப்பராயன் சாமிகோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சங்கிலி கருப்பராயன் கோவில்

சேவூரில் வாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மாட்டூர் என சுந்தரமூர்த்தி நாயன்மாரால் தேவார வைப்பு தலமாக பாடல் பெற்றதும், நடுச்சிதம்பரம் என போற்றத்தக்கதும், வாலியால் பூஜிக்கப்பட்ட திருத்தலமுமாகும். இந்த கோவிலின் கிழக்கே பாலிக்காடு (கந்தப்பகவுண்டன்புதூர்) பகுதியில் 200 ஆண்டு பழமையான சங்கிலி கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது. ஆலமர நிழலில் கோவில் அமைந்துள்ளது. இங்கு சங்கிலி கருப்பராயன், கன்னிமார்சாமி, மாகாளியம்மன், சங்கிலி முனீஸ்வரன் சிலைகள் உள்ளன. இந்த கோவிலில். தினசரி பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கோவில் பூசாரி மாரிமுத்து கூறியதாவது:-

அமாவாசை

இக்கோவிலில் மாதம்தோறும் வரும் அமாவாசை தினத்தன்று நள்ளிரவு 12 மணிக்கு மாகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்மாதம் முதல் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் பக்தர்கள் முனீஸ்வரனுக்கு அடசல் வைத்து வழிபட்டு, சாமியிடம் வேண்டுதல் வைப்பார்கள். பக்தர்கள் வேண்டுதலை சாமி நிறைவேற்றி தருகிறது. இங்கு வள்ளி மரம், வில்வ மரம் சிறப்பு வாய்ந்தது. குதிரைவாகனம் அமைந்த சிறப்பு தளம். கோவிலுக்கு குலதெய்வ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த அமாவாசை தினத்தன்று கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story