வீரக்குமாரசாமி கோவில் 2-ம் நாள் தேரோட்டம்
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மாசி மகா சிவராத்திரி தேர்த்திருவிழாவையொட்டி 2-ம் நாள் தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
வீரக்குமார சாமி கோவில்
திருப்பூர் மாவட்டம் வெள்ளேகோவிலில் உள்ள வீரக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும், இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியையொட்டி தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு 140-வது மாசி மகா சிவராத்திரி தேர்த்திருவிழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
தினமும் பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடத்தப்பட்டு வருகிறது. 10-ந் தேதி தேர் கலசம் வைத்தலும், 18-ந் தேதி பள்ளய பூஜை, நேற்று முன்தினம் சாமி திருத்தேருக்கு எழுந்தருளச் செய்தலும், அதைத்தொடர்ந்து தேரோட்டமும் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
2-ம் நாள் தேரோட்டம்
நேற்று மாலை 5 மணிக்கு 2-ம் நாள் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி பிறகு சாமி தேர்க்கால்பவனி, தேவஸ்தான மண்டப கட்டளை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நாளை (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்் தேதி வரை 11 கோவில் குலத்தவர்களின் மண்டப கட்டளை நடைபெற உள்ளது, தேர் திருவிழா ஏற்பாடுகளை கோவில் குலத்தவர்களும், முதன்மைதாரர் நற்பணி மன்றத்தினரும், இந்து சமய அறநிலையத் துறையினரும் செய்து வருகின்றனர்.
தேர் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தேரோட்ட நிகழ்ச்சியில் கோவில் குலத்தவர்கள், முதன்மை தாரர்கள் நற்பணி மன்றத்தினர், முன்னாள் அறங்காவலர்கள், இந்து சமய அறநிலையத்துறையினர், திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.