கோவளம் ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்


கோவளம் ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
x

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது:-

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் சேவையை அதிகரிக்க அரசும், தனியார் நிறுவனமும் தீவிரம் காட்டி வருகின்றன. பணக்காரர்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்கான ஹெலிகாப்டர் சேவைக்காக மீட்க முடியாத சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்த தமிழக அரசே துணை போவது கண்டிக்கத்தக்கதாகும்.

சென்னையிலிருந்து புதுச்சேரி வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலை சுற்றுலாவிற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவுக்கு சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சுற்றுலா வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை விட கூடுதலான நடவடிக்கைகளை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மேற்கொள்ள வேண்டும். ஆனால், வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலை பலி கொடுத்து விட்டு, சுற்றுலாவை வளர்த்தெடுப்பதில் தமிழக அரசு அதீத ஆர்வம் காட்டி வருகிறது.

அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக கோவளத்தை மையமாகக் கொண்டு ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. கம்போடியாவைச் சேர்ந்த ஏரோடான் சாப்பர் என்ற நிறுவனம் அதன் இந்திய துணை நிறுவனத்தின் மூலம் இந்த சேவையை நடத்தி வருகிறது. கோவளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பயணிகளை ஏற்றிச் சென்று சென்னையின் முக்கிய இடங்கள், கோவளம், மாமல்லபுரம், கடற்கரை பரப்புகள் ஆகியவற்றை சுற்றிக்காட்டும் சேவையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இதற்கு தமிழக அரசும், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளன. கிழக்குக் கடற்கரையின் அழகை சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு வசதியாக ஹெலிகாப்டர் குறைந்த உயரத்தில் பறப்பதால் மிக அதிக இரைச்சல் எழுகிறது. இது மக்களுக்கு மட்டுமின்றி பறவைகளுக்கும் பேராபத்தை ஏற்படுத்துகின்றன.

இதை சுட்டிக்காட்டி கடந்த ஜனவரி மாதம் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் நான் கடிதம் எழுதினேன், அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை இப்போது மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் ஹெலிகாப்டர் சேவையை தீவிரப்படுத்தவும் அரசு தீர்மானித்துள்ளது. மக்களின் எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் நலனையும் மீறி ஹெலிகாப்டர் சுற்றுலா திணிக்கப்படுவது ஆபத்தானது.

இயற்கையின் கொடையாக, உலகப்புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இணையாக சென்னை - கோவளம் பகுதியில் உள்ள முட்டுக்காடு - கேளம்பாக்கம் உப்பங்கழிக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கில் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. கோவளத்திற்கு அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம், பெரும்பாக்கம் சதுப்புநிலம், சிறுதாவூர் ஏரி, நன்மங்கலம் காப்புக் காடு ஆகிய பகுதிகளும் அதிக எண்ணிக்கையில் பறவைகள் வலசை வரும் பகுதி ஆகும். இயற்கையாக நமக்கு கிடைத்த இந்த வரத்தை நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால், ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் என்ற பெயரில் இந்த வரத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இதை அனுமதிக்க முடியாது.

ஹெலிகாப்டர் தாழ்வாக பறப்பதால் ஏற்படும் இரைச்சல் அங்கு வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு பெரும் இடையூறாக உள்ளன. அதுமட்டுமின்றி, ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றாலும் கிழக்கு கடற்கரை சாலை பகுதி பாதிக்கப்படும். இதனால், பறவைகள் வருகை முற்றிலுமாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் முட்டுக்காடு தொடங்கி அண்மையில் தமிழ்நாட்டின் 18 ஆம் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள கழுவேலி பறவைகள் சரணாலயம் வரையிலான பகுதிகளில் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருவதால், ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியையும் பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில், தனியார் நிறுவனத்தின் லாபத்தைக் கருத்தில் கொண்டு ஹெலிகாப்டர் சேவையை அரசே திணிப்பது சரியல்ல.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சரணாலயத்திலிருந்து 5 கி.மீ சுற்றளவில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட அதேபோல் பாதுகாக்கப்பட வேண்டிய கோவளம் பகுதியில், வெடிகளை விட பல மடங்கு இரைச்சல் எழுப்பும் ஹெலிகாப்டர் சுற்றுலாவை அரசு அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது.

கோவளம் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை செயல்படுத்தப்படுவதால், கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுலா எந்த அளவுக்கு வளர்ச்சியடையுமோ, அதை விட அதிக சுற்றுலா வளர்ச்சியை, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிப்பதன் மூலம் எட்ட முடியும். இதைக் கருத்தில் கொண்டு கோவளம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சுற்றுச்சூழலையும், பறவைகளையும் பாதுகாப்பதற்காக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பசுமைத் தாயகம் மற்றும் பிற சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று எச்சரிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளது.


Next Story