கோவளம் மீனவர்கள் வேலை நிறுத்தம்


கோவளம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலில் தூண்டில் வளைவை நீளமாக அமைக்கக்கோரி கோவளம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

கடலில் தூண்டில் வளைவை நீளமாக அமைக்கக்கோரி கோவளம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூண்டில் வளைவு

கன்னியாகுமரி அருகே கோவளம் கடற்கரை கிராமம் உள்ளது. இங்கு மீனவர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இவர்களது முக்கிய தொழில் மீன்பிடித்தொழில் ஆகும்.

இங்கு நாட்டு படகுகள் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கடற்கரை பகுதியில் அடிக்கடி கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. கடல்சீற்றத்தின் போது ராட்சத அலையில் நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்கள் சிக்கி கவிழ்ந்து விடுகின்றன. இதனால் மீனவர்களுக்கு காயம் ஏற்படுவதோடு மட்டுமின்றி உயிர் பலியாகும் ஆபத்தான நிலையும் இருந்து வருகிறது. இந்த சீற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே போடப்பட்டிருந்த தூண்டில் வளைவு பாலம் ராட்சத அலையினால் உடைந்து சேதம் அடைந்து விட்டன.

மீனவர்கள் வேலை நிறுத்தம்

இதனால் சேதம் அடைந்த தூண்டில் வளைவு பாலத்தை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். மீனவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று தற்போது இந்த தூண்டில் வளைவு பாலம் நீட்டிக்கப்பட்டு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஆனால் தூண்டில் வளைவு பாலத்தை கடலுக்குள் நேராக அமைக்காமல் வளைவாக அமைத்து வருவதால் மீனவர்களுக்கு மீண்டும் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இந்தநிலையில் கோவளம் கடற்கரையில் அமைக்கப்படும் தூண்டி வளைவு பாலத்தை தரமாகவும், நீளமாகவும் அமைத்து தரக்கோரி கோவளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நாட்டு படகுகள் மற்றும் வள்ளங்கள் கடற்கரையில் ஓய்வெடுத்தன. மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் கடற்கரையில் உள்ள மீன் சந்தைகளும் மீன்வரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


Related Tags :
Next Story