கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவை காணவிழுப்புரத்தில் குவிந்த திருநங்கைகள்சாலைகளில் ஒய்யாரமாக வலம் வருகின்றனர்
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவை காண விழுப்புரம் நகருக்கு திருநங்கைகள் வந்துள்ளனர். இவர்கள் சாலைகளில் ஒய்யாரமாக வலம் வருகின்றனர்.
3-ம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகளின் அடையாளம் என்றாலே அது விழுப்புரம்தான். ஏனெனில் அவர்கள் குலதெய்வமாக வணங்கும் கூத்தாண்டவர் கோவில் விழுப்புரம் அருகே கூவாகம் என்ற கிராமத்தில் உள்ளது.
முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் இருந்த நிலையில் மாவட்டம் பிரிவினையின்போது இக்கிராமம் விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு சேர்க்கப்பட்டது.
கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 18 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில் திருநங்கைகள் லட்சக்கணக்கில் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. வருகிற 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் திருநங்கைகள் தங்களை மணப்பெண்கள்போல் அலங்கரித்துக்கொண்டு கோவில் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். மறுநாள் அதாவது 3-ந் தேதி (புதன்கிழமை) சித்திரை தேரோட்டம் நடக்கிறது.
விழுப்புரம் வந்துள்ள திருநங்கைகள்
இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் கடந்த 2 நாட்களாக விழுப்புரம் நகருக்கு வரத்தொடங்கியுள்ளனர்.
திருநங்கைகளின் வருகையையொட்டி தங்கும் விடுதிகளில் கட்டணத்தை சற்று உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விலை உயர்வை பொருட்படுத்தாமல் திருநங்கைகள் விழுப்புரம் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளனர்.
ஒய்யாரமாக வலம்...
இவர்கள் வழக்கமாக பளபளப்பான உடைகளில் வலம் வருவார்கள். ஆனால் இந்த திருவிழா சமயங்களில் மட்டும் தங்களை கூடுதல் அழகு செய்துகொண்டு நகரில் ஒய்யாரமாக வலம் வந்த வண்ணம் உள்ளனர். சில திருநங்கைகள் சினிமா நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு விதவிதமான உடைகளை அணிந்தபடி வலம் வருகின்றனர். இவர்கள் அனைவரும் மாலை நேரங்களில் நகரில் உள்ள சாலைகளில் உற்சாகமாக நடைபோட்டு பூக்கடைகளுக்கு சென்று பந்து, பந்தாக பூக்களை வாங்கி தங்கள் தலையில் சூடிக்கொள்கின்றனர். இவர்களை பார்ப்பதற்காக ஏராளமான இளைஞர்கள் அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் முன்பு உலா வருகின்றனர். விழுப்புரம் நகருக்கு வரத்தொடங்கியுள்ள திருநங்கைகளால் கூவாகம் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது.