கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் - 5 காவலர்கள் சஸ்பெண்ட்


கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் - 5 காவலர்கள் சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 13 Jun 2022 2:45 AM IST (Updated: 13 Jun 2022 3:56 AM IST)
t-max-icont-min-icon

விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சென்னை கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.

பெரம்பூர்,

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் அப்பு என்ற ராஜசேகர் (வயது 31). இவர், பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளார். இவர் மீது சோழவரம், வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்.கே.பி. நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 22-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் கொடுங்கையூர் போலீசார் நேற்று முன்தினம் ஒரு திருட்டு வழக்கில் விசாரணைக்காக ராஜசேகரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

நேற்று காலை அவரிடம் இருந்து திருட்டு நகையை பறிமுதல் செய்வதற்காக போலீசார் ராஜசேகரை வெளியே அழைத்து வந்தனர். அப்போது ராஜசேகர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை போலீசார் கொடுங்கையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் ராஜசேகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி அறிந்த ராஜசேகரின் உறவினர்கள், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி முன்பு திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, "இதில் போலீசார் அத்துமீறல் ஏதேனும் உள்ளதா? என விசாரணை நடத்த மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. விசாரணை முடிவில் போலீஸ் அத்துமீறல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். விசாரணை அறிக்கை வந்த பிறகு தேவைப்பட்டால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கும் மாற்றப்படும்" என்றனர்.

போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சென்னை கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், ராஜசேகர் மீது ஏற்கனவே 27 குற்ற வழக்குகள் உள்ளன. விசாரணையின் போது ராஜசேகருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. ராஜசேகர் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரிப்பார். ராஜசேகரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவது காவல்துறையினரின் கடமை. ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்" என்று கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்தார்.


Next Story