கொடநாடு கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி நியமனம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி படுகொலை செய்யப்பட்டார். எஸ்டேட் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்காகும்.
இந்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி கனகராஜ் விபத்தில் இறந்துபோனார். இந்த சம்பவம் இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது.
இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் நேரடியாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினார். சசிகலாவிடம் ஐ.ஜி.சுதாகர் நேரடியாக சென்னை வந்து விசாரித்தார். இந்த வழக்கின் மறுவிசாரணையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, கடந்த மாதம் 30-ம் தேதி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. டி.ஜி.பி. சைலேந்திரபாபு இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து அதன் விசாரணை அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.காவலர் பயிற்சி மைய கல்லூரியின் டிஜிபியாக பதவி வகித்த ஷகீல் அக்தர், கடந்த 2021-ம் ஆண்டு சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.