கொடைக்கானல் மலைப்பாதையில் தலைக்குப்புற கவிழ்ந்த சுற்றுலா வேன்:8 பேர் படுகாயம்
கொடைக்கானல் மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த 15 பேர் வேனில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். இதையடுத்து நேற்று காலை அவர்கள் கொடைக்கானலில் இருந்து ஆந்திராவிற்கு வேனில் புறப்பட்டனர். வேனை குண்டூரை சேர்ந்த கிரண் (வயது 47) என்பவர் ஓட்டினார்.
கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் டம் டம் பாறை அருகே வேன் வந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. இதில் வேனில் இருந்தவர்கள் அபயகுரல் எழுப்பினர். ஒரு கட்டத்தி்ல் வேன் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. அப்போது அந்த வழியாக வந்தவர்கள் வேனின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீ்ட்டனர். பின்னர் படுகாயமடைந்த டிரைவர் கிரண், சுற்றுலா பயணிகள் அஜய் (30), ஆனந்த் (45) உள்பட 8 பேரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.