கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மலர்க்கண்காட்சி தொடக்கம்


கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மலர்க்கண்காட்சி தொடக்கம்
x

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்க்கண்காட்சியும், கோடைவிழாவும் நடத்தப்பட உள்ளது.

திண்டுக்கல்,

'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா 17-ந்தேதி(நாளை) தொடங்கி 26-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், சுற்றுலாத்துறை மூலமாக கோடைவிழாவும் நடத்தப்பட உள்ளது.

மலர் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்காவில் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு நடவு செய்யப்பட்ட செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. சேவல், மயில், 360 டிகிரி செல்பி பாயிண்ட், வண்ணத்து பூச்சி, வீடு, பொம்மைகள், நெருப்புக் கோழி, வான் கோழி ஆகிய உருவங்கள் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதே போல் நாய் கண்காட்சி, மீன் பிடிக்கும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, சைக்கிள் பந்தயம், விளையாட்டுகள் மற்றும் பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி, மேஜிக் ஷோ உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடைபெற உள்ளன. மேலும் மாலை நேரத்தில் லேசர் ஷோ நடத்தப்பட உள்ளது. மாற்று திறனாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களுக்கு நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story