வாலிபரை கொன்று கிணற்றில் வீச்சு?
விருதுநகர் அருகே வாலிபரை கொன்று உடல் கிணற்றில் வீசி சென்றனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே வாலிபரை கொன்று உடல் கிணற்றில் வீசி சென்றனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்து வேறுபாடு
விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் ஆத்தியப்பன் (வயது 33). இவருடைய மனைவி மலர்கொடி. இவர்களுக்கு 2 குழந்தைகள்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் பிரிந்து இருக்கும் நிலையில் மலர்கொடி இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் ஆத்தியப்பன் குறிப்பிட்ட வேலை எதுவும் இல்லாத நிலையில் கிராம பகுதிகளில் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது வீடுகளில் கதவை தட்டும் பழக்கத்தையும் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
கிணற்றில் உடல்
இந்தநிலையில் ஓ.கோவில்பட்டி அருகே உள்ள கட்டனார்பட்டியில் ரங்கராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் வெட்டு காயங்களுடன் ஆத்தியப்பனின் உடல் கிடந்தது.
இதனைக்கண்ட ரங்கராஜன் வச்சக்காரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் கிணற்றிலிருந்து உடலை மீட்டனர். வெட்டுக்காயங்களுடன் உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடனடியாக உடல் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலையா?
இதுகுறித்து விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா மற்றும் வச்சகாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
வாலிபர் ஆத்தியப்பனை நேற்று முன்தினம் கிராம பகுதியில் பார்த்ததாக பலர் கூறும் நிலையில் அவர் அன்றைய தினம் கொலை செய்யப்பட்டு உடல் கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என கருதும் போலீசார் ஆத்தியப்பனை கொலை செய்வதற்கான காரணம் என்ன? கொலை சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து மலர்கொடிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடமும் விசாரணை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் ஓ. கோவில்பட்டி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.