'கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்' - அமைச்சர் சிவசங்கர்


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் - அமைச்சர் சிவசங்கர்
x

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த 30-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அரசு பேருந்துகள் சேவை செயல்பட தொடங்கியது.

இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"தற்போது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் செயல்படுகின்றன. மற்ற பேருந்துகளும் கிளாம்பாக்கம் சென்றுதான் சென்னையின் மற்ற பகுதிகளுக்குச் செல்கின்றன.

பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் முழுமையாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.


Next Story