சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஒரு வயது குழந்தை கடத்தல்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலை தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த ஒரு வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டது. குழந்தையை 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார், இது தொடர்பாக வடமாநில தம்பதியையும் கைது செய்தனர்.
சென்னை,
ஒடிசா மாநிலம் கந்தாமால் மாவட்டத்தை சேர்ந்தவர் லங்கேஸ்வர் (வயது 24). இவரது மனைவி நந்தினி (20). இவர்களது ஒரு வயது ஆண் குழந்தை ஆயூஸ். இவர்கள் திருப்பதியில் உள்ள ஐஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் நந்தினி மற்றும் அவருடைய மகன் ஆயூஸ் உடன் ஒடிசா செல்வதற்காக சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தார். அப்போது, ஒடிசா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிக அளவு கூட்டம் இருந்ததால் அடுத்த ரெயிலுக்காக காத்திருந்தார். அடுத்த ரெயில் மறுநாள் (திங்கட்கிழமை) காலை என்பதால் ரெயில் நிலைய நடைமேடையில் நந்தினி குழந்தையுடன் தூங்கினார்.
குழந்தை கடத்தல்
இதையடுத்து, நேற்று அதிகாலை 2 மணியளவில் கழிவறை செல்வதற்காக நந்தினி எழுந்துள்ளார். அப்போது, நந்தினி அருகில் தூங்கிக்கொண்டிருந்த மகன் ஆயூஸ் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் நந்தினி ரெயில் நிலையம் முழுவதும் தேடியுள்ளார். ஆனால், எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் இதுகுறித்து சென்டிரல் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு ஆணும், பெண்ணும் குழந்தை ஆயூசை கடத்தி செல்வது தெரிய வந்தது. மேலும், அவர்கள் குழந்தையுடன் ரெயில்நிலையம் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏறிச்செல்வதும் பதிவாகி இருந்தது.
இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து ஆட்டோவின் பதிவு எண்ணை கொண்டு வால்டாக்ஸ் சாலையில் உள்ள மற்ற ஆட்டோ டிரைவர்களிடம் விசாரித்தனர். அந்த நேரத்தில், கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவு எண் கொண்ட ஆட்டோ வந்தது.
அந்த ஆட்டோ டிரைவரை போலீசார் விசாரித்ததில், குழந்தையை கடத்தி சென்ற 2 பேரையும் குன்றத்தூர் பகுதியில் இறக்கி விட்டதாக தெரிவித்தார். உடனடியாக ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சரளா தலைமையில் 6 பேர் கொண்ட போலீசார் குன்றத்தூர் விரைந்தனர். அங்கு உள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வடமாநில தம்பதி கைது
அப்போது, குன்றத்தூர் செம்பரம்பாக்கம் ஏரிக்கரையோரம் உள்ள ஒரு வீட்டில் குழந்தையை கடத்தி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னா், போலீசார், அந்த வீட்டில் இருந்த பெண்ணையும், அவரது கணவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பரபாஸ் மண்டல் (44). அவருடைய மனைவி நமீதா (26) என்பதும், அவர்கள் இங்கு தங்கி கூலி வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், குழந்தையை விற்பதற்காக கடத்தியதை ஒப்புக்கொண்டனர்.
சென்டிரல் ரெயில் நிலையத்தில் அதிகமான வடமாநிலத்தவர்கள் வந்து செல்வார்கள் என்பதால் இங்கு குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து இதேபோல் வேறு இடத்தில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டு உள்ளார்களா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயிடம் ஒப்படைப்பு
பின்னர், மீட்கப்பட்ட குழந்தை ஆயூசை எழும்பூர் ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் சென்டிரல் ரெயில்வே இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சரளா மற்றும் போலீசார் நந்தினியிடம் ஒப்படைத்தனர். அப்போது, நந்தினி கண்ணீர் மல்க குழந்தையை கட்டித்தழுவி கொஞ்சினார். போலீசாருக்கு கைக்கூப்பி நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில், குழந்தை கடத்தி சென்ற 2 பேரையும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 3 மணி நேரத்தில் பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் சரளா மற்றும் போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்த குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.