15 வயது சிறுமி கடத்தல்போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


15 வயது சிறுமி கடத்தல்போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x

இரணியல் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 15 வயது சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

குளச்சல்,

இரணியல் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 15 வயது சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சிறுமி மாயம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் லுக்மான் (வயது 19). இவர் அங்கு ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் இடைேய இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த 3 மாதங்களாக பழகி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி சிறுமி டைப் ரைட்டிங் வகுப்பிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து சிறுமியின் தாயார் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

ஊருக்கு அழைத்து வந்தார்

இந்தநிலையில் நேற்று லுக்மான் சிறுமியை அவரது வீட்டில் கொண்டு விட ஊருக்கு அழைத்து வந்தார். இதை பார்த்த சிறுமியின் குடும்பத்தினர் இருவரையும் குளச்சல் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் லுக்மான் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி சென்னை, பெங்களூரு, வேளாங்கண்ணி, ஊட்டி போன்ற ஊர்களுக்கு கடத்தி சென்றுள்ளார். பின்னர் கையில் இருந்த பணம் தீர்ந்ததும் சிறுமியை வீட்டில் கொண்டு விட வந்தது தெரிய வந்தது.

போக்சோ சட்டத்தில் கைது

இதையடுத்து லுக்மான் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து தக்கலை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story