வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி: ரவுடியை தாக்கி காரில் கடத்தல் 20 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு


வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி:  ரவுடியை தாக்கி காரில் கடத்தல்  20 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
x

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ரவுடியை தாக்கி காரில் கடத்திய 20 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்

சேலம்,

ரவுடி கடத்தல்

சேலம் கோரிமேடு பிருந்தாவன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 36), ரவுடியான இவர் மீது தாரமங்கலம், அழகாபுரம், மாவட்ட குற்றப்பிரிவு ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (35). இவரும், பூபதியும் நண்பர்கள் ஆவர். அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு பூபதியின் வீட்டு முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் 20 பேர் வந்தனர்.

பின்னர் அவர்கள் திடீரென பூபதி, பிரவீன்குமார் ஆகியோரை தாக்கி காரில் ஏற்றி கடத்தினர். அந்த கார் கும்பலை சேர்ந்த ஒருவரை ஏற்றுவதற்காக 5 ரோடு பகுதியில் நின்றது. இந்த நேரத்தில் பிரவீன்குமார் அவர்களிடம் இருந்து நைசாக தப்பினார். மேலும் 20 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அழகாபுரம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து ரவுடி பூபதி கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பூபதி பலரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அதனால் அதுதொடர்பாக அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இதையடுத்து கடத்தல் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதவிர பூபதியை காரில் கடத்தி சென்ற கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பூபதியின் செல்போன் எண்ணை கொண்டு ஆய்வு செய்ததில் திருவண்ணாமலை, செங்கம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளை காட்டுகிறது. இதனால் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் 20 பேர் கொண்ட கடத்தல் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலத்தில் ரவுடி கடத்தப்படட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.


Next Story