கீழ்ப்பாக்கத்தில் பள்ளி மாணவன் ஆட்டோவில் கடத்தப்பட்டாரா? போலீசார் விசாரணையில் மாணவனே கடத்தல் நாடகமாடியது அம்பலம்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் பள்ளி மாணவன் ஆட்டோவில் கடத்தப்பட்டதாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
7-ம் வகுப்பு மாணவன் கடத்தல்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன், நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஆட்டோவில் ஏறுவதற்கு காத்திருந்தான். அப்போது அங்கே இன்னொரு ஆட்டோவில் வந்த 2 பேர் மாணவரை வலுக்கட்டாயமாக தங்களது ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றதாகவும், ஓடும் ஆட்டோவில் மாணவர் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி சிக்னலில் ஆட்டோ நின்றபோது, அந்த மாணவன் கீழே குதித்து தப்பினார். பின்னர் மெட்ரோ ரெயிலில் ஏறி கொண்டித்தோப்பில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
உதவி கமிஷனர் ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் வனிதா, சாம் வின்சென்ட் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இதுகுறித்து விசாரித்தனர்.
விசாரணையில் மாணவன் கடத்தப்பட்டது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், அந்த பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த பிறகே உண்மையிலேயே பள்ளி மாணவன் ஆட்டோவில் கடத்தப்பட்டானா? என்பது குறித்து தெரியவரும். அதன்பிறகே இந்த புகார் தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை மேற்கொண்ட போது தேர்வுக்கு அஞ்சி மாணவன் கடத்தல் நாடகம் ஆடியது அம்பலமாகியுள்ளது. கடத்தல் நாடகம் ஆடிய சிறுவனை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.