வேடசந்தூரில் முன்னாள் அமைச்சரின் காரை தாக்கி அ.தி.மு.க. வேட்பாளர் கடத்தல்


கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் பங்கேற்க சென்றபோது வேடசந்தூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் காரை தாக்கி அ.தி.மு.க. வேட்பாளரை மர்மகும்பல் கடத்தி சென்றது.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் காரை தாக்கி அ.தி.மு.க. வேட்பாளரை மர்மகும்பல் கடத்தி சென்றது.

துணைத்தலைவர் தேர்தல்

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 6 வார்டுகளை தி.மு.க.வும், 6 வார்டுகளை அ.தி.மு.க.வும் கைப்பற்றி சமபலத்துடன் உள்ளன. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளார். ஆனால் துணைத்தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த பதவிக்கான தேர்தல் சில காரணங்களால் 6 முறை தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என்றும், நீதிபதிகள் மூலம் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து நேற்று மதியம் துணைத்தலைவர் தேர்தல் மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் நடைபெற இருந்தது. இதில் துணைத்தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரும், பரமத்திவேலூர் மாவட்ட கவுன்சிலருமான திருவிக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். தி.மு.க. சார்பில் தேன்மொழி என்பவர் போட்டியிட்டார்.

காரை மறித்த மர்மகும்பல்

இதற்கிடையே துணைத்தலைவர் தேர்தலையொட்டி திருவிக உள்பட அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்கள் 6 பேரும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் பகுதியில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் தேர்தல் நாளான இன்று திண்டுக்கல்லில் இருந்து மாவட்ட கவுன்சிலர்களை அழைத்துக்கொண்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒரு காரில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த காரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 2 பெண் கவுன்சிலர்கள் உள்பட 6 பேர், டிரைவர் என மொத்தம் 8 பேர் வந்தனர். அவர்களது கார் மதியம் 12 மணி அளவில் வேடசந்தூர் அருகே திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் அய்யனார் நகர் மேம்பாலம் பகுதியில் வந்தது. அப்போது திடீரென்று எதிரே 4 கார்களில் வந்த 20 பேர் கொண்ட மர்மகும்பல் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் காரை வழிமறித்தது.

பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தங்களது கார்களில் இருந்து இறங்கி, முன்னாள் அமைச்சரின் காரை நான்கு திசைகளிலும் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த கும்பல் சாலையில் திராவக பாட்டில்களை போட்டு உடைத்தனர். இதனை பார்த்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கவுன்சிலர்கள் அச்சமடைந்தனர்.

வேட்பாளர் கடத்தல்

இதற்கிடையே அந்த கும்பலை சேர்ந்த 2 பேர், திடீரென்று எம்.ஆர்.விஜயபாஸ்கரின் காரை உருட்டுக்கட்டையால் அடித்து நொறுக்கினர். இதில், காரின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பின்னர் காரில் வந்த துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் திருவிக.வை காரில் இருந்து வெளியே பிடித்து இழுத்தனர். பின்னர் அவரது தலையில் துணியை போட்டு மூடி, அவரை அந்த கும்பல் தங்களது கார்களில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். ஒருசில நிமிடங்களில் இந்த சம்பவம் அங்கு அரங்கேறியது.

இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேடசந்தூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வேடசந்தூர் நகர செயலாளர் பாபுசேட் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு குவிந்தனர். இதனால் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட கூடுதல் துணை சூப்பிரண்டு சந்திரன், வேடசந்தூர் துணை சூப்பிரண்டு துர்காதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் உடன் வந்த மாவட்ட கவுன்சிலர்களிடம் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மாவட்ட கவுன்சிலரை கடத்திய கும்பல் குறித்து போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சரின் காரை வழிமறித்து தாக்கி, அவரது கண்முன் அ.தி.மு.க. வேட்பாளரை கடத்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

=======

"குறுக்கு வழியில் பதவியை பிடிக்க தி.மு.க. அராஜகம்"

எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

மர்மகும்பல் தாக்குதல், கடத்தல் சம்பவங்களுக்கு பிறகு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழுவில் அ.தி.மு.க. கவுன்சிலர்களை தி.மு.க.வினர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். ஏற்கனவே அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்கள் 2 பேரை, தி.மு.க.வினர் மிரட்டி பணிய வைத்துவிட்டனர். தற்போது தி.மு.க. 6, அ.தி.மு.க. 6 என கரூர் ஊராட்சிக்குழுவில் கட்சிகளின் பலம் சமமாக இருந்தது. இதற்கிடையே மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவியை நேர்மையாக நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, துணைத்தலைவர் தேர்தலை விரைந்து நடத்த தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இதற்கிடையே தேர்தல் நெருங்கி வந்த நிலையில், அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்களை தி.மு.க.வினர் மிரட்டி வந்தனர். இதனால் எங்களது கவுன்சிலர்களை திண்டுக்கல் பகுதிக்கு அழைத்து சென்று பாதுகாப்பாக வைத்திருந்தோம். இன்று (அதாவது நேற்று) தேர்தல் நடைபெற இருந்த நிலையில், கவுன்சிலர்களை அழைத்துக்கொண்டு கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தோம். ஆனால் மர்மகும்பல் எங்களை வழிமறித்து, துணைத்தலைவர் வேட்பாளரை கடத்தி சென்றுவிட்டது. தி.மு.க.வினர் நேர்மையாக தேர்தலை சந்திக்க வழியின்றி, குறுக்கு வழியில் பதவியை பிடிக்க இதுபோன்று அராஜக செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story