நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா


நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா
x
தினத்தந்தி 9 Oct 2023 12:15 AM IST (Updated: 9 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் அருகே கீழ்ப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை

கேது பெயர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி நாகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இதனால் இந்த கோவில் கேது பகவானின் பரிகார தலமாக விளங்குகிறது. கேதுபகவானை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு, நாக தோஷம் , திருமணத்தடை நீங்கி செல்வ செழிப்புடன் நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. நேற்று மாலை 3 .41 மணி அளவில் கேதுபகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை யொட்டி கேது பரிகார யாகம் நடந்தது. பின்னர் கேதுபகவானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், கங்கை நீர் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

மகாபிஷேகம்

தொடர்ந்து யாக குடங்களிலிருந்து புனித நீர் ஊற்றப்பட்டு மகாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு சரியாக 3.41 மணியளவில் தீபாரதனை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கேதுவை வழிபட்டனர்.

இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஞானவேலன், கோவில் தலைமை அர்ச்சகர் பட்டு சிவாச்சாரியார், ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர். கேது பெயர்ச்சி நாளிலிருந்து 18 நாட்களுக்கு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. இந்த நாட்களுக்குள் கேதுவை வழிபட்டால் பெயர்ச்சி நாளன்று வழிபட்ட பலன் கிடைப்பதாக ஐதீகம்.

கார்கோடக நாதர் கோவில்

இதேபோல் கோடங்குடி கிராமத்தில் கைவல்லி அம்பிகை உடனான கார்கோடக நாதசாமி கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இக்கோவிலில் நேற்று ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது. நேற்று மதியம் 3.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னிராசிக்கும் இடம் பெயர்ந்தார். இதையொட்டி கைவல்லி அம்பிகை உடனான கார்கோடகநாத சாமி கோவிலில் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு பூர்ணாகுதி நடந்து கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்தன. தொடர்ந்து மாலை 3.50 மணியளவில் கார்கோடகநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதேபோல் கைவல்லி அம்பிகைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.


Next Story