தொடர் திருட்டில் ஈடுபட்ட கேரள வாலிபர் சிக்கினார்
பொள்ளாச்சி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட கேரள வாலிபர் போலீசில் சிக்கினார். அவரிடம் இருந்து 19 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.
நகைகள் திருட்டு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சங்கம்பாளையம் காலனியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 70). இவர் சொந்த வேலை காரணமாக பணிக்கம்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். மேலும் அவ்வப்போது, சங்கம்பாளையம் காலனியில் உள்ள சொந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு வந்தார்.
இந்த நிலையில் நாகராஜ் கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி வழக்கம்போல் தனது சொந்த வீட்டை பார்வையிட சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகையை மர்ம ஆசாமி திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வந்தனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் பாலக்காடு ரோடு மண்ணூர் பகுதியில் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கேரள வாலிபர்
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர், கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சாலு (வயது 37) என்பதும், நாகராஜ் வீட்டில் தங்க நகையை திருடியவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர், மகாலிங்கபுரத்தில் உள்ள ஒருவரது வீட்டில் 7 பவுன் நகையையும் திருடி உள்ளார். உடனே தொடர் திருட்டில் ஈடுபட்ட அவரை கைது செய்த போலீசார், 19 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.