கன்னியாகுமரி அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகை திருடிய கேரள ஆசாமி கைது
கன்னியாகுமரி அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகளை திருடிய கேரள ஆசாமியை தகவல் கிடைத்த 3 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
வெளிநாட்டில் வேலை
கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் தவமணி கிருபா (வயது34). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயராணி. இவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டை பூட்டிவிட்டு லீபுரத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் நேற்று காலை 9 மணி அளவில் ஜெயராணி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
கேரள ஆசாமி சிக்கினார்
இதுகுறித்து ஜெயராணி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அத்துடன் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சிலுவை நகர் பகுதியில் சந்தேகப்படும் படியாக ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். அவரிடம் இருந்த பையை சோதனையிட்ட போது அதில் 40 பவுன் நகைகள் இருந்தது.
இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கேரள மாநிலம் நெடுமங்காடு குளத்துறையை சேர்ந்த ஹரி பிரசாத் (53) என்பதும், இவர் ஜெயராணி வீட்டில் கதவை உடைத்து நகைகள் திருடியதும் தெரியவந்தது.
போலீசாருக்கு பாராட்டு
இதனையடுத்து ஹரி பிரசாதை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே திருட்டு குறித்து தகவல் கிடைத்த 3 மணி நேரத்தில் திருடனை விரைந்து பிடித்த கன்னியாகுமரி போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பாராட்டினார்.