"முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடு"


முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடு
x

“முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளதாகவும், புதிய அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடு” என்றும் கேரள நீர்வளத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின் முகநூல் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேனி

முல்லைப்பெரியாறு

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணை, தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. அணை பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்திவிட்டு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் கூறியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து 8 ஆண்டுகள் ஆகியும் பேபி அணையை பலப்படுத்தும் பணியை தொடங்க விடாமல் கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அணை பலமாக இருப்பதால் புதிய அணை தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டபோதிலும், புதிய அணை கட்டுவதற்கான முயற்சியை கேரள அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

அணைக்கு எதிரான வதந்தி

இது ஒருபுறம் இருக்க கேரளாவில் அணைக்கு எதிரான வதந்திகளை சிலர் தொடர்ந்து பரப்பி மக்களை அச்சப்படுத்தி வருகின்றனர். அணைக்கு எதிராக சமூக வலைத்தளங்களிலும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இதுபோன்ற வதந்தி, அவதூறுகள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால் வதந்தி பரப்புபவர்களால் இருமாநில மக்களின் நல்லுறவு பாதிக்கப்பட்டு வருவதாக தமிழக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் கேரளாவில் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிரான கருத்துகளை சில அரசியல் கட்சியினரும், சில அமைப்புகளை சேர்ந்தவர்களும் பரப்பி வருகின்றனர்.

கேரள மந்திரி கருத்து

இந்நிலையில் கேரள நீர்வளத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின் தனது முகநூல் பக்கத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்து பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள நீர்வளத்துறை செய்த திட்டங்கள் தொடர்பான அவரின் முகநூல் பதிவில், "முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என்பதே கேரள அரசின் நிலைப்பாடு". அணையில் 136 அடி நீர்மட்டம் என்பது கேரளாவின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், 142 அடி என்பது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு. கேரளாவுக்கு பாதுகாப்பு, தமிழகத்துக்கு தண்ணீர் என்பதே கேரளாவின் இலக்கு.

தற்போது உள்ள அணைக்கு கீழ் பகுதியில் 1,300 அடி தொலைவில் புதிய அணை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ளது. கோர்ட்டு அனுமதி கிடைத்தவுடன் புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியதும் நமக்கு சாதகமாகவே உள்ளது. முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் சாத்தியமான அனைத்தையும் மாநில அரசு செய்து வருகிறது" என்று கூறியுள்ளார்.

இந்த கருத்துக்கு தமிழக விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


Next Story