கெங்கையம்மன் கோவில் குடமுழுக்கு
குத்தாலம் அருகே கெங்கையம்மன் கோவில் குடமுழுக்கு
குத்தாலம்:
குத்தாலம் தாலுகா அசிக்காடு கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து நவகிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர் முக்கிய நிகழ்வான குடமுழுக்கு விழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நிறைவுற்று கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு விமான கலசத்தை அடைந்தது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருக்கயிலாய பரம்பரை சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சாமிகள், சிவராமபுரம் பஞ்சமுக ஆஞ்சநேயர் மட வாயுசுத்த ராமானுஜ தாச ஜூயர், தேசிய நதிநீர் இணைப்பு இயக்க மாவட்ட செயலாளர் தேரழுந்தூர் கார்த்திகேயன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.