கெலவரப்பள்ளி அணை கால்வாய் உடைந்தது


கெலவரப்பள்ளி அணை கால்வாய் உடைந்தது
x
தினத்தந்தி 27 Aug 2022 12:30 AM IST (Updated: 27 Aug 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் கெலவரப்பள்ளி அணை கால்வாய் உடைந்தது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:-

ஓசூர் கெலவரப்பள்ளி அணை கால்வாய் உடைந்தது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

கெலவரப்பள்ளி அணை

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து கடந்த 4-ந் தேதி 2 பிரதான கால்வாய்கள் மூலம் முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நாற்று நடும் பணி முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து இடதுபுற பிரதான கால்வாயில் நேற்று முன்தினம் அதிகளவில் நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கால்வாயின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றது.

நேற்று முன்தினம் ஓசூர் பகுதியில் மழை பெய்வதற்கான அறிகுறி இருந்ததால் கால்வாய் பாசனம் செய்யும் விவசாயிகள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை குறைக்க வேண்டும். இல்லை என்றால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பை முழுவதுமாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது.

கால்வாய் உடைந்தது

இதற்கிடையே ஓசூர் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. கால்வாயில் மேலும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. முத்தாலி அருகே கொத்தூர் கிராமத்தில் கால்வாய் உடைந்து நீர் வெளியேறி அந்த பகுதியில் காட்டாற்று வெள்ளம் போல் ஓடியது.

தகவல் அறிந்து எந்தவொரு அதிகாரிகளும் வந்து பார்க்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஏரி நிரம்பியது

இதற்கிடையே ஓசூர் பகுதியில் பெய்த கனமழையால் மூக்கண்டப்பள்ளி ஏரி, நிரம்பி தண்ணீர் கால்வாய் மூலம் பேடரப்பள்ளி ஏரிக்கு வர தொடங்கியது. இந்த ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி, அங்கிருந்து நேற்று காலை திடீரென்று தண்ணீர் வெளியேறி கரைபுரண்டோடியது. இதனால் காமராஜர் நகர் மற்றும் சாந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகளின் மீது 3 அடிக்கு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்களும் அந்த வழியே சென்று வருவதற்கு மிகவும் அவதிப்பட்டதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் அந்தப்பகுதியில் தாழ்வான இடங்கள் அதிகம் காணப்படுவதால் குட்டைகள் போன்று ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றன. இதனிடையே, திடீரென சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஏரியின் கரை உடைந்து விட்டதோ? என மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


Next Story