கீழடிக்கு செல்ல ஆர்வம் காட்டும் அய்யப்ப பக்தர்கள்


கீழடிக்கு செல்ல ஆர்வம் காட்டும்   அய்யப்ப பக்தர்கள்
x

கீழடியை பார்வையிடுவதற்கு அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

சிவகங்கை


கீழடியை பார்வையிடுவதற்கு அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

கீழடி

மதுரையை அடுத்த கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வந்த 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தன. இந்த அகழாய்வில் பாசிமணிகள், சிறுவர்கள் விளையாட பயன்படுத்தும் சில்லுவட்டுகள், செங்கல் சுவர், யானை தந்தத்தால் ஆன பகடைக்காய்கள் உள்ளிட்ட ஏராளமான பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. 8-ம் கட்ட அகழாய்வு அறிக்கை தயாரிக்கும் பணி, ஆவணப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு மேற்கொள்வதற்கான பூர்வாங்க பணியும் நடந்து வருகிறது.

இதுபோல், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சியகப்படுத்திட உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகமும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் முடிந்து திறப்பு விழாவிற்காக தயாராக இருக்கிறது.

அய்யப்ப பக்தர்கள் சீசன்

இந்தநிலையில், அய்யப்ப சீசனையொட்டி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல மாவட்டங்களில் உள்ள பக்தர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட இடங்களுக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு மதுரை வந்து விட்டு, ராமேசுவரம் செல்லும் பக்தர்கள் கீழடியையும் பார்வையிட ஆர்வம் காட்டுகின்றனர்.

அகழாய்வு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மற்றும் அதனை சுற்றி ஏற்கனவே அகழாய்வுகளில் கிடைத்த பொருட்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையை ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர். இதுமட்டுமின்றி திறப்பு விழாவிற்கு தயாராக இருக்கும், கீழடி அருங்காட்சியகத்தையும் அவர்கள் பார்வையிட்டு செல்கின்றனர். அங்கு வந்து சென்றதன் நினைவாக புகைப்படமும் எடுத்துக்கொள்கின்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ராமேசுவரம் செல்லும் வழியில் கீழடியை பார்வையிட வந்திருக்கிறோம். தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக கீழடி இருக்கிறது என்றனர்.

தண்ணீரால் பாதிப்பு

மழைக்காலம் என்பதால் கொந்தகை அகழாய்வு குழிகளில் அதிக அளவு ஊற்று நீர் உள்ளது.

இதனை அவ்வப்போது அங்குள்ள பணியாளர்கள் வெளியேற்றி வருகின்றனர். இருப்பினும் அதிக தண்ணீருடன், அந்த குழிகள் காட்சியளிக்கின்றன.


Next Story