பிச்சை எடுக்கும் வேளாண் அதிகாரிக்கு 6 வாரத்தில் ஓய்வூதிய பலன் வழங்க கெடு-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
வறுமையால் கல்வியை தொடர முடியாமல் மகன் தற்கொலை செய்ததால் விரக்தி அடைந்து வீட்டைவிட்டு வெளியேறி பிச்சை எடுக்கும் வேளாண் அதிகாரிக்்கு சேர வேண்டிய பணப்பலன்களை 6 வாரத்தில் வட்டியுடன் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
வறுமையால் கல்வியை தொடர முடியாமல் மகன் தற்கொலை செய்ததால் விரக்தி அடைந்து வீட்டைவிட்டு வெளியேறி பிச்சை எடுக்கும் வேளாண் அதிகாரிக்்கு சேர வேண்டிய பணப்பலன்களை 6 வாரத்தில் வட்டியுடன் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பிச்சை எடுத்த முதியவர்
மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் கோபால் என்ற முதியவர், யாசகம் பெற்று வந்தார். அவ்வப்போது அவர், சிலரிடம் சொந்த வாழ்க்கையில் நடந்த சோகங்களைப்பற்றி கூறியுள்ளார்.
அதாவது, அவர் அரசுத்துறையில் பணியாற்றியதாகவும், ஓய்வு பெற்ற பின்னர் தனக்கு சேர வேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் கிடைக்காததால் ஏற்பட்ட வறுமையில், படிப்பை தொடர முடியாமல் எனது மகன்களில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட மனவேதனையில் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். தற்போது கோவில், கோவிலாக சென்று பிச்சை எடுத்து வாழ்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.
வேளாண் உதவி அதிகாரி
இதை அறிந்த பக்தர் ஒருவர், தனது நண்பரான வக்கீல் ஜின்னா என்பவரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து கோபால் சார்பில் வக்கீல் ஜின்னா, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை திருச்சிற்றம்பலத்தில் எனது குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த 1971-ம் ஆண்டு மதுரை திருமங்கலத்தில் வேளாண்மைத்துறையின் கள அலுவலராக நியமிக்கப்பட்டேன். பின்னர் வேளாண் உதவி அதிகாரியாக பதவி உயர்வு பெற்று, தஞ்சாவூர் மாவட்டம் ஆவணம் என்ற ஊருக்கு இடமாற்றம் செய்தனர். 2006-ம் ஆண்டில் ஓய்வு பெற்றேன்.
அப்போது கூட்டுறவு சங்கத்தில் எனது கடன் நிலுவையில் இருந்ததால், எனக்கு ஓய்வூதியம், பணப்பலன்களை வழங்கவில்லை. இதனால் எனது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. எனது மகன் தற்கொலை செய்து கொண்டார். எனது 2 மகள்களுக்கும் 40 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் ஆகாமல் கூலி வேலைக்கு செல்கிறார்கள். விரக்தி அடைந்த நான், வீட்டை விட்டு வெளியேறி கோவில்களில் பிச்சை எடுத்து பிழைக்கிறேன். எனவே எனது குடும்ப சூழ்நிலை கருதி, எனக்கு சேர வேண்டிய பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
கடன் தொகை நிலுவை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் 74 வயதுடையவர். இவர் பல்வேறு துயரங்களை சந்தித்துள்ளார். அதை கவனத்தில் கொண்டு, இந்த உத்தரவை பிறப்பிக்கிறேன். மனுதாரர் கோபால், தஞ்சை மாவட்ட வேளாண்மை உதவி அலுவலர்கள் கூட்டுறவு சேமிப்பு சங்கத்தில் கடன் பெற்றுள்ளார். கடன் தொகை சரியான நேரத்தில் செலுத்தாததால், கடன் நிலுவைத் தொகை ரூ.5,37,730- ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்த தொகையை செலுத்திவிடுவதாக கோபால் இங்கு தெரிவித்துள்ளார்.
6 வாரத்தில் ஓய்வூதியம்
கடன் வழங்கிய கூட்டுறவு சங்கச்செயலாளர், இதுதொடர்பாக கோபாலின் ஓய்வூதியத்தொகையில் அவர் வாங்கிய கடன் தொகையை கழித்து கொள்ள சம்மதம் என பேராவூரணி வேளாண்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்.
தமிழ்நாடு ஓய்வூதிய விதி 61-ன்படி ஓய்வூதியத் திட்டத்தைத் தயாரித்து அதை இறுதி செய்வது உரிய அதிகாரியின் கடமை. எனவே மனுதாரருக்கு சேர வேண்டிய ஓய்வூதியத்தொகையில் கடன் தொகையை கழித்துவிட்டு, மீத தொகையை உரிய வட்டியுடன் 6 வாரத்தில் அதிகாரிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு முடிவடைந்து கோர்ட்டைவிட்டு வெளியில் வந்த கோபால், வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறி 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. 16 ஆண்டுகளுக்கு பின்பு எனக்கான ஓய்வூதிய பலன்களை வழங்கும்படி தற்போது கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சற்று ஆறுதல் அளிக்கிறது, என்றார்.